என்னை அவமானப்படுத்தினாலும் அதைத் தாங்கும் சக்தி எனக்குண்டு - ஜனாதிபதி

Published By: Digital Desk 3

03 Jan, 2022 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவல் ஏற்படுத்திய சில பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்களால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக ஒருசிலர் என்னை அவமானப்படுத்தினாலும் அதைத் தாங்கும் சக்தி என்னிடம் உள்ளது. 

என்னை அவமதிக்கும் எவரும் என் வாழ்நாளில் நான் இந்நாட்டுக்குச் செய்த சேவைகளில் ஒரு சிலதையாவது செய்யாதவர்களே ஆவர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக என்னைத் தெரிவு செய்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இதுவரை நாம் எதிர்கொண்ட தடைகளைக் கடந்து, புதிய பயணத்தை மேற்கொள்ள தயாராக உள்ளேன்.

அதற்காகக் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டி ஏற்பட்டாலும், அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களைத் தெரிவிக்கும் வகையில், மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 'ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷண்' கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

இராணுவ அதிகாரியாகவும் பாதுகாப்புச் செயலாளராகவும் நான் நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, நீங்கள் என்னை கௌரவிக்கின்றீர்கள். எனது இருபது வருடகால இராணுவச் சேவையின் போது, ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இரண்டாம் ஈழப்போரின் போதும், வடக்கு மற்றும் கிழக்கில் நான் பல முக்கியப் பணிகளைச் செய்தேன். 

இந்திய அமைதி காக்கும் படை வருவதற்கு முன்னர், வடமராட்சி நடவடிக்கையின் நான்கு படைப்பிரிவுகளில் ஒன்றுக்கு நான் கட்டளையிடும் அதிகாரியாகப் பணிபுரிந்தேன். இது அப்போது செயற்பாட்டில் இருந்த மிகப்பெரிய நடவடிக்கையாகும்.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமாகிய சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணக் கோட்டையை விடுவிக்க முதல் இரண்டு படைப்பிரிவுகளில் ஒன்றுக்கு நான் கட்டளையிட்டேன். வெலிஓயா, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் பல முக்கிய பணிகளைச் செய்தேன். அதற்காக ரணசூர (போர்வீரர்) மற்றும் ரண விக்ரம (போர்வீரர்) பதக்கங்களையும் ஜனாதிபதி விருதுகளையும் பெற்றேன்.

பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நேரடியாகப் பங்களித்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நான் பெரும்பான்மை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்பதை, ருவன்வெலி மஹா சேயவுக்கு முன்பாக ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது அறிவித்தேன்.

என்னை இந்த நாட்டின் முதல் குடிமகனாக ஆக்குவதற்கு பல அர்ப்பணிப்புகளைச் செய்த சிங்கள பௌத்தர்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பூரண பொறுப்பு எனக்கு உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன்.

இதற்காக நான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், நான் பெற்ற பௌத்த போதனைகளும் உத்வேகமும், இந்நாட்டின் ஏனைய சகோதர மதத்தினரும் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை நான் ஏற்படுத்தியுள்ளேன் என்பதையும் விசேடமாகக் குறிப்பிட வேண்டும். எனது ஆட்சிக் காலத்தில், நமது புராதன பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு நாங்கள் செயல் ரீதியாக உறுதியளித்துள்ளோம்.

இரண்டு வருடங்களாக உலகளாவிய தொற்றுப் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு எம்மால் முடிந்தது. ஆனாலும், அது ஏற்படுத்திய சில பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள், இந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக ஒருசிலர் என்னை அவமானப்படுத்தினாலும் அதைத் தாங்கும் சக்தி என்னிடம் உள்ளது. மேலும், என்னை அவமதிக்கும் எவரும் என் வாழ்நாளில் நான் இந்நாட்டுக்குச் செய்த சேவைகளில் ஒரு சிலதையாவது செய்யாதவர்களே ஆவர்.

இவ்வுலகில் அவமானம் அல்லது புகழை மட்டுமே பெற்ற எவரும் இல்லை என்று புனித பௌத்த போதனை தம்மபதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நாட்டில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் என்பதை இத்தருணத்தில் விசேடமாகக் குறிப்பிட வேண்டும். 

பல்லாயிரம் வருட வரலாற்றைக் கொண்ட சிங்களக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். எனவே, நமது விழுமியங்கள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அனுசரணை வழங்கும்.

வரலாறு முழுவதும் இந்த நாட்டின் பிரதான கலாசாரத்துடன் இணைந்து சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்த அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும், தமது சமய மற்றும் தேசிய அடையாளங்களைப் பாதுகாத்து கௌரவத்துடன் வாழ்வதற்கு உள்ள உரிமையை நான் எப்போதும் நிலைநாட்டுவேன். 

நாட்டின் ஜனாதிபதியாக என்னைத் தெரிவு செய்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இதுவரை நாம் எதிர்கொண்ட தடைகளைக் கடந்து, புதிய பயணத்தை மேற்கொள்ள தயாராக உள்ளேன்.

அதற்காகக் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டி ஏற்பட்டாலும், அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன் என்பதை, மஹா சங்கத்தினரின் முன்னிலையில் பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18