(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் வழங்கிய நான்கு பசளைகளை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி விளைச்சல் பெறாத விவசாயிகளுக்கு மாத்திரம் நட்டஈடு வழங்கப்படும்.

எவ்வகையான உரத்தையும் பயன்படுத்தாது விளைச்சல் கிடைக்கவில்லை என போராடுபவர்களுக்கு நட்டஈடு வழங்க முடியாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கண்டி தலதாமாளிகையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம். நிலைபேறான விவசாய கொள்கை திட்டத்தை சிறந்த முறையில் வெற்றிப் பெற செய்வோம்.

சேதன பசளை திட்டத்திற்கு சுற்றாடற்துறை அமைச்சும், சுகாதாரத்துறை அமைச்சும்,அரசாங்கத்தில் பொறுப்பான நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை. 

சேதன பசளை திட்டத்திற்கு எதிராக ஊடகங்களில் திட்டமிட்ட வகையில் பிரசாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.இரசாயன உர நிறுவனங்களுக்கு சார்பாகவே பல்வேறு தரப்பினர் தற்போதும் செயற்படுகிறார்கள்.

விசாயிகளின் கோரிக்கைகக்கமைய இரசாயன உர இறக்கமதி மற்றும் பாவனைக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இரசாயன உர பாவனைக்கு அரசாங்கம் எவ்வித சலுகையினையும் வழங்காது என்பதை உறுதியாக குறிப்பிட்டுள்ளோம். பெரும்பாலான விவசாயிகள் சேதன பசளையினை பயன்படுத்தி சிறந்த விளைச்சலை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உரத்தை முறையாக பயன்படுத்தியுள்ளார்களா என பரிசீலனை செய்யப்பட்டு அதனடிப்படையில் விளைச்சல் குறைவடைந்துள்ளவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும்.

சேதன பசளை கொள்கைத்திட்டத்திற்கமைய முதலில் சேதன பசளை வழங்கினோம். அதனை தொடர்ந்து உயிரியல் திரவ உரம்,பொற்றாசியம் குளோரைட், நெனோ நைட்ரஜன் ஆகிய நான்கு வகையிலான உரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கிய நான்கு வகையான உரத்தை பயன்படுத்தி விளைச்சல் பெறாத விவசாயிகளுக்கு மாத்திரம் நட்டஈடு வழங்கப்படும்.

எவ்வகையான உரத்தையும் பயன்படுத்தாது விளைச்சல் கிடைக்கப் பெறவில்லை என போராடுபவர்களுக்கு நட்டஈடு வழங்க முடியாது என்றார்.