(ஆர்.யசி)

சீனாவின் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளும், அரசாங்கத்திற்கு தரகுப்பணம் கிடைக்காது என்ற இரண்டு பிரதான காரணங்களுக்காகவுமே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாதுள்ளது என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் பாரிய நிதி நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தின் தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள கால தாமதம் மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை நிராகரிக்க ஏதுவான காரணிகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்.

இலங்கை பாரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இந்த நிலையிலும் அரசாங்கம் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க மட்டுமே முயற்சிக்கின்றது.

வெவ்வேறு நாடுகளிடம் இருந்து கடன்களை பெற்றுக்கொள்வதன் மூலமாக தமக்கு தரகுப்பணம் கிடைக்கும் என நினைக்கின்றனர். 

அதுமட்டுமல்ல சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக கடன்களை பெற்றுக்கொண்டால் எவருக்குமே தரகுப்பணம் கிடைக்காது.

அவர்கள் தேசிய வேலைத்திட்டங்களுக்கு பணம் வழங்கப்போவதில்லை. ஆகவே அவ்வாறான செயற்பாடுகள் ஆட்சியாளர்களின் பைகளை நிறைக்காது.

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் பி.பி ஜெயசுந்தர ஆகியோர் எப்படிப்பட்ட ஊழல் வாதிகள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். அவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் நான் வாதிட்டேன். 

எனினும் அதனை எவருமே கருத்தில் கொள்ளவில்லை. அவர்களின் தீர்மானங்கள் காரணமாகவே இன்று நாடே கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.

அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு சீனா ஒருபோதும் இடமளிக்காது. அதையும் மீறி இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சீனாவினால் அடுத்த கட்டத்தில் கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ள சகல நிதியும் நிறுத்தப்படுவது மட்டுமல்ல.

 இப்போது  அவர்கள் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள கடன்களையும் மீள செலுத்த கடுமையான அழுத்தம் கொடுப்பார்கள். இன்றும் இந்த அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது என்றால் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருக்க வேண்டும். இப்போது செல்வதால் உடனடியாக தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை. ஆனால் இதே நிலையில் நாடு பயணித்தால் இறுதியாக நாம் சர்வதேச நாணய நிதியதையே நாட வேண்டிவரும் என்றார்.