(ஆர்.யசி)

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தின் 24 எண்ணெய் குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கவும், 61 எண்ணெய் குதங்களில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 51 வீத பங்குகளும், இலங்கை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு 49 வீத பங்குகள் என்ற அடிப்படையில் இணைந்து நடாத்தவும், அதேபோல் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் பயன்படுத்தும் 14 எண்ணெய் குதங்களை மேலும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கே குத்தகைக்கு வழங்கவும் இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையின் போது  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்.

கடந்த காலத்தில் எமது ஆட்சியில் இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்ட திருகோணமலை எண்ணெய் குதங்களை மீண்டும் எமக்கே பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட்ட  பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுடன் மட்டும் இணைந்து அபிவிருத்தி செய்ய 1987 ஆம் ஆண்டு இணக்கம் காணப்பட்டது. இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வோம் என தீர்மானிக்கப்பட்டாலும் கூட 2003 ஆம் ஆண்டு ஆட்சியில் 99 எண்ணெய் குதங்களையும் 35 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. 

2017 ஆம் ஆண்டில் மலிக் சமரவிக்கிரம -சுஸ்மா சுவராஜ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த எண்ணெய் குதங்களில் குறிப்பிட்ட அளவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

எனினும் நாம் இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய 99 எண்ணெய் குதங்களில் 24 எண்ணெய் குதங்களை இலங்கை அரசாங்கத்தின் மூலமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. 

அதேபோல் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் பயன்படுத்தும் 14 எண்ணெய் குதங்களை மேலும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கே குத்தகைக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சியுள்ள 61 எண்ணெய் குதங்களையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 51 வீத பங்குகளும், இலங்கை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு 49 வீத பங்குகள் என்ற அடிப்படையில் "trinco petroleum terminal limited " எனும் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படுகின்றது. 

இந்த துணை நிறுவனத்தின் மூலமாக இலங்கைக்கு சாதகமான வகையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படும். நிறுவனம், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தொடர்பில் கோப் குழுவில் கேள்வி எழுப்பவும், பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பக்கூடிய விதத்திலும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 24 எண்ணெய் குதங்கள் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனம் மூலமாக நிருவகிக்கப்படும் 61 எண்ணெய் குதங்களையும் இணைத்து 85 எண்ணெய் குதங்களின் நிருவாக அதிகாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமே இருக்கும். 

இலங்கை ஐ ஒ.சிக்கு 14 எண்ணெய் குதங்களே இருக்கும். 61 எண்ணெய் குதங்களும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தமாக 50 ஆண்டுகால குத்தகை என்ற அடிப்படையில் செய்துகொள்ளப்படும். 

எனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை எண்ணெய் குதங்களை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். வெகு விரைவில் திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை கொடியை பறக்கவிடுவோம். 

இந்த உடன்படிக்கை வெகு விரைவில் கைச்சாத்திடப்படும். அதற்கு முன்னர் எதிர்வரும் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் கைச்சாத்திட்ட அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கவுள்ளேன்.

மேலும் இந்த உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி, பிரதமரை தெளிவுபடுத்தியுள்ளேன். அதேபோல் தொழிற்சங்கங்கள் இதனை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழிற்சங்கங்களுடனும்  நாம் பேசியுள்ளோம், இனியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். அவர்களின் ஆரோக்கியமான ஆலோசனைகளை உடன்படிக்கையில் இணைத்துக்கொள்ளவும் முடியும். 

அதேபோல் 55 எண்ணெய் குதங்களை நேரடியாக நாம் கையாள போகின்றோம். இவற்றை புனரமைக்க எம்மிடம் பணம் உள்ளது. இவற்றை முழுமையாக புனரமைக்க 11 பில்லியன் ரூபாவே தேவைப்படும்.  அதனை எம்மை செலவழிக்க முடியும், இதனை வேறு நாடுகளிடம் கடன் கேட்டு அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.