(எம்.மனோசித்ரா)

முத்திரைகள் அகற்றப்பட்ட அல்லது பாவனைக்கு உட்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவதற்கு லாஃப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய லாப் சிலிண்டர்களை மீள கையளிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவித்தலையும் லாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மேலும் பாவித்த லாஃப் சிலிண்டர்களின் நிறையை அளவிட்டு எஞ்சிய எரிவாயுவிற்கான பணத்தை மீள செலுத்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து லாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த 17 ஆம் திகதி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய டிசம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரைகள் அகற்றப்பட்ட அல்லது பாவனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் (எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்கள்) சிலிண்டர்களை மீளக் கையளிக்கும் போது நுகர்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

அதற்கமைய முதலில் நுகர்வோர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் அமைந்துள்ள லாஃப் சமையல் எரிவாயு விநியோக முகவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பின்னர் 12.5 மற்றும் கிலோ எடையுடைய சிலிண்டர்களை அங்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இதன் போது நுகர்வோர் முன்பாகவே அவர்களது சிலிண்டர்களின் எடை அளவிடப்பட்டு , எஞ்சியுள்ள எரிவாயு குறித்த விபரமும் அக்கணமே அறிவிக்கப்படும். அதற்கமைய புதிதாக வழங்கப்படும் சிலிண்டர்களில் பழைய சிலிண்டரில் எஞ்சியிருந்த சமையல் எரிவாயுக்கு நிகராக எரிவாயு மீள் நிரப்பி தரப்படும். அல்லது அதற்குரிய பணத்தொகை வழங்கப்படும்.

அதாவது உதாரணமாக 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரில் 2 கிலோ எரிவாயு மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்குமாயின், புதிய சிலிண்டரை கொள்வனவு செய்யும் போது 10.5 கிலோ எரிவாயுவிற்கான பணத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானது. (கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஒரு கிலோ கிராம் எரிவாயுவின் விலை 227.2 ரூபாவாகும். ஒரு கிராமிற்கான விலை 0.2272 சதமாகும். )

1345 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு www.laugfsgas.lk என்ற லாஃப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்குள் பிரவேசித்து மேலதிக தகவல்களையும் , தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.