எம்மில் சிலருக்கு குழந்தை பிறந்து ஓர் ஆண்டிற்குள் அவர்களுக்கு வலிப்பு அல்லது திடீரென்று கோமா நிலைக்கு சென்று விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இத்தகைய பாதிப்பிற்கு அவர்களுடைய குருதியில் இயல்பான அளவைவிட கூடுதலாக சோடியம் என்ற உப்புச்சத்து அதிகரிப்பதுதான் காரணம். இத்தகைய பாதிப்பினை மருத்துவத் துறையினர் ஹைபர்நெட்ரீமியா என குறிப்பிடுவார்கள். 

இதனை தற்போது உணவு முறையின் மூலம் முழுமையான நிவாரணமளித்து கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இயல்பான அளவைவிட கூடுதலாக தாகம் எடுத்தாலும் அல்லது நீங்கள் வெளியேற்றும் சிறுநீரில் ஏதேனும் மாற்றம் தென்பட்டாலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா..? இல்லையா..? என்பது குறித்த பரிசோதனையை, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டும். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை பெறாவிட்டால், ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகரித்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். எம்முடைய குருதி ஓட்டத்திற்கு சோடியம் என்ற சத்தும் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து குறைபாடு, வாந்தி, காய்ச்சல், கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் அளவு, தீக்காயங்கள், சிறுநீரக பாதிப்பு நோய்கள் போன்றவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு பலருக்கு ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவரை சந்தித்து, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, ரத்தத்தில் சோடியம் அளவை துல்லியமாக அவதானிக்க வேண்டும். பிறகு மருத்துவர்கள் சோடியம் அளவு ரத்தத்தில் குருதியில் கலக்கும் சதவீதத்தை அவதானித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதன்போது சோடியம் சத்து குறைவான உணவை குறிப்பிட்ட காலம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைப்பார். அவர்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால், இத்தகைய பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

டொக்டர் ராஜேஷ்.

தொகுப்பு அனுஷா.