சூர்யா நடிப்பில் தயாராகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெற்ற 'உள்ளம் உருகுதையா..' என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் காட்சியில் நடித்த போது வெட்கப்பட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் சத்யராஜ், வினய் ராய், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வாடா தம்பி..' என்ற பாடல் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற 'உள்ளம் உருகுதையா..' என தொடங்கும் பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடல் குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய சுட்டுரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பாடலில் நடிக்கும்போது வெட்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

 இந்தப் பாடலில் அவர் மீசையை மழித்து தமிழ் கடவுளான முருகன் வேடத்தில் நடித்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். நேற்று வெளியான இந்த பாடல் தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா நடிக்கும்  'எதற்கும் துணிந்தவன்' பட மாளிகையில் வெளியாகவிருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.