(ஆர்.யசி)

இலங்கை சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முன்னர் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

இன்றைய ஆட்சியில் இவை அனைத்துமே கேள்விக்குறியாக உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும்  எனக்கு வழங்கிய ஒத்துழைப்பை இந்த அரசாங்கத்திற்கு வழங்குவார்களா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நிதி நெருக்கடி நிலைமைகள், அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

நாட்டில் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலையொன்று உருவாகிக்கொண்டுள்ளதுடன் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளோம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், இறக்குமதிகளை முன்னெடுக்க முடியாத நிதி நெருக்கடி, சர்வதேச கடன் பொறி என நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக தாக்கும் விதமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. 

ஒருபுறம் மக்கள்  சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. வேலையில்லா பிரச்சினைகள், இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் மனநிலை உருவாகியுள்ளது, விவசாய நிலங்களை கைவிடுவதால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது. 

இவற்றையும் தாண்டிய சர்வதேச நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.