''எல்லாவற்றையும் சமரசத்தின் அடிப்படையில், நாம் பேசித் தீர்க்க முடியுமாக இருந்தால் அதுதான் மிகச் சிறந்தது. இந்தக் கருமங்கள் இன்றைக்கோ நாளைக்கோ முடியப் போவதில்லை. தமிழர்களும் முஸ்லிம்களுமாகிய நாங்கள்,  பரம்பரை பரம்பரையாக இங்குதான் வாழப் போகிறோம். ஆனபடியால், எங்களுக்கு மத்தியில் சில சமரசங்கள் தேவை. நாங்கள் பேசித்தான் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்'' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன் ''சிங்களவர்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ, தமிழர்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ, முஸ்லிம்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ ஒரு தீர்வு வர முடியாது. இறுதித் தீர்வு எல்லோருக்கும் திருப்தியளிப்பதாக இருக்க வேண்டும்."  என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் இரா.சம்பந்தன் எம்.பி. மேலும் கருத்து வெளியிடுகையில், 

தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமேயாகும். சிறுபான்மை மக்களுக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.  இறுதியில், ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இறுதி அரசியல் தீர்வானது எல்லோரது  அங்கீகாரத்தையும் பெற வேண்டியுள்ளதால் , அந்த தீர்வைப் பொறுத்த வகையில் அடிப்படை விடயங்களில் எல்லோருடைய சம்மதமும் மிக அவசியம். இதற்குப் பிறகு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாகக் கூடிய நிலமை மீண்டும் எப்போது வரும் என்று தெரியாது. 

வடக்கு கிழக்கு இணைப்பு, அது தமிழ் பேசும் மக்களது தனியான பிரதேசம் என்பது எங்களது நீண்டகாலக் கோரிக்கை. 1957 இல் பண்டாரநாயக்கா அதற்கு உடன்பட்டிருந்தார். பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் அது எழுத்து மூலம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக அது இணைக்கப்பட்டது. பின்னர் ஜே.வி.பி. தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது.  இணைப்பின் போதான ஒரு நடைமுறைத் தவறையே (Procedural Flaw) இதற்குக் காரணமாகக் காட்டினார்கள். வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கை என்றார். 

இந்த சந்தர்ப்பத்தில், கிழக்கு முஸ்லிம்களது நிலைப்பாடு குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது. 

"1987க்குப் பின்னர் இவ்விணைப்பு ஏற்படுத்தப்பட்டபோது, அது குறித்த எதிர்கால அச்சமும் சந்தேகமும் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது அந்த அச்சத்துடன்,  கடந்த கால கசப்பான அனுபவங்களும் சேர்ந்து நிலமையை மேலும் சிக்கலாக்கி விட்டன. குறிப்பாக 1990 இன் பயங்கர அனுபவங்கள், ஆழமான வடுவாக முஸ்லிம்களின் மனதில் பதிந்துள்ளன.

எனவே வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு விடயம் அணுகப்பட வேண்டும் . எல்லோரது இணக்கத்துடன்தான்,இந்த விடயம் குறித்த இறுதி நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதன்போது வலியுறுத்தியது.

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன் எம்.பி. , "எல்லாவற்றையும் சமரசத்தின் அடிப்படையில், நாம் பேசித் தீர்க்க முடியுமாக இருந்தால் அதுதான் மிகச் சிறந்தது. இந்தக் கருமங்கள் இன்றைக்கோ நாளைக்கோ முடியப் போவதில்லை. தமிழர்களும் முஸ்லிம்களுமாகிய நாங்கள்,  பரம்பரை பரம்பரையாக இங்குதான் வாழப் போகிறோம். ஆனபடியால், எங்களுக்கு மத்தியில் சில சமரசங்கள் தேவை. நாங்கள் பேசித்தான் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

சிங்களவர்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ, தமிழர்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ, முஸ்லிம்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ ஒரு தீர்வு வர முடியாது. இறுதித் தீர்வு எல்லோருக்கும் திருப்தியளிப்பதாக இருக்க வேண்டும்."  இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவாடல்களும்  உரையாடல்களும்  இதற்கு மிகவும் அவசியம் என்பது  இதன் போது நலங்லாட்சி தேசிய முன்னணி பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையாக, நேரடி மக்கள் சந்திப்புகளை ஏற்படுத்த ந.தே.முன்னணி தயார் எனவும், அவற்றில் கலந்து கொள்ளுமாறும் த.தே. கூட்டமைப்பின் தலைவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அவற்றில் கலந்து கொள்ள அவர் இணக்கமும் தெரிவித்துள்ளார்.

 இச்சந்திப்பில்  நல்லாட்சிக்கா தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியாலாளர் அப்துர் ரஹ்மான், தலைமைத்துவ சபையின் தவிசாளர் சிறாஜ் மஷ்ஹூர் மற்றும் தேசிய அமைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.