இலங்கை போக்குவரத்து சபைக்கு பஸ் வண்டிகள் தேவைப்படும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆட்சிக் காலத்தின் தூர நோக்கற்ற பொருளாதாரத் திட்டத்தின் விளைவான எயார் பஸ் ரக விமானங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா தெரிவித்தார். 

இவ்வாறு அதிக விலை மிக்க எயார் பஸ் ரக விமானங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் நாடு பாரிய பொருளாதார பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இவ்வாறு செலவிடப்படும் பணத்தைக் கொண்டு பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களையும், விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் மாத்திரமல்லாமல் முழு கல்வி செயற்பாட்டையும் மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

சர்வதேச சிறுவர் தினத்தின் நிமித்தம் இன்று கொட்டாஞ்சேனை சங்கபோதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்கா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இவ்வைபவத்தின் போது ஒரு தொகை விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பாடசாலைக்குத் தேவையான ஏனைய பொருட்களையும் நிதியமைச்சர் அன்பளிப்பாக வழங்கினார். 

இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா குறிப்பிட்டதாவது, நாம் தற்போது 2017 ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கல்விக்கு நிதியொதுக்கீட்டை மேற்கொள்ளும் போது நாம் முகம் கொடுத்த பெரிய பிரச்சினை தான் கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையற்ற செலவுகளை ஈடுசெய்யும் விதம் தொடர்பானதாகும்.

குறிப்பாக ஸ்ரீ லங்கன் எயார் நிறுவனம் மேற்கொண்ட ஒழுங்கு முறையற்ற கொள்வனவுகளின் விளைவுகளை நாம் அனுபவித்து வருகின்றோம். ஸ்ரீ லங்கன் எயார் நிறுவனத்தினால் கொள்வனவு செய்ய ஒடர் கொடுக்கப்பட்ட ஏ 350 ரக எயார் பஸ் ரக விமானங்கள் விரைவில் இலங்கைக்குக் கிடைக்கப் பெறவிருக்கின்றது. இவ்விமானங்கள் அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் நாம் மாதாந்தம் சுமார் 1400 மில்லியன் அமெரிக்க டொலர்களை தவணைக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் நாம் உண்மையில் செலுத்த வேண்டிய தொகை 950 மில்லியன் ரூபா தான். 

இந்த விமானங்கள் உண்மையான பெறுமதியை  விடவும் 25 வீதம் அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. பிழையான டென்டர் விதிமுறையைப் பின்பற்றியதன் காரணமாக அதிக பணத்தைச் செலவிட நேர்ந்துள்ளது. இது மாத்திரமல்லாமல் இந்த ரக விமானம் ஒரே முறையில் சுமார் 17 மணித்தியாலயங்கள் தொடராகப் பறக்கக் கூடியது.  

நாம் இலங்கையில் இருந்து கொண்டு எந்த நாட்டுக்குப் பறப்பதற்கு இவ்வாறான விமானங்கள் எமக்குத் தேவை எனக் கேட்கின்றேன். அவ்வாறான பயணப் பாதை எமக்குள்ளதா? அதனால் இதனை எம்மால் தொடர்ந்தும் கொண்டு நடாத்த முடியாது என்று நாம் தீர்மானித்துள்ளோம். இதனை விடுத்து நாம் அதனை பெற்றால் மாதமொன்றுக்கு நாம் 890 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். அதனால் நஷ்டத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக குறித்த கம்பனியிடம் இந்த விமானத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளோம். அதன் நிமித்தம் நாம் சுமார் 1960 கோடி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. 

இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை எமது கல்வித் துறைக்கு பயன்படுத்தி இருக்கலாம். பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்து இருக்கலாம். பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வு கூடங்களை அமைத்துக் கொடுத்திருக்கலாம். இவற்றுக்கு இப்பணத்தைச் செலவிட்டிருக்கலாம். இப்பணத்தைக் கொண்டு ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கலாம். கடந்த கால ஆட்சியாளர்கள் இவை தொடர்பில் எவ்வித வெளிப்படைத் தன்மையுடனும் செயற்படாமல் எழுந்தமானதாக செயற்பட்டதன் விளைவுகளே இவை. அவர்கள் அவ்வாறு செயற்பட்ட போதிலும் அதன் விளைவுகளை நாம் அனுபவிக்க நேர்ந்துள்ளது. அதனால் இங்கு இடம்பெற்றுள்ள மோசடிகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு” என்றும் அமைச்சர் அவர்கள் மேலும் கூறினார்.