வசந்த கரன்னாகொட விவகாரம் : மகனை இழந்த தாய் நியாயம் கோரி உயர் நீதி மன்றில் மேன்முறையீடு

Published By: Digital Desk 3

28 Dec, 2021 | 10:03 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமலாக்கிய  சம்பவம் தொடர்பில், கொழும்பு,  ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு  ஏற்காமல் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி  செய்தமையை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரோஜா கோவிந்த சாமி நாகநாதன் அல்லது மஹராச்சிகே சரோஜினி பெரேரா எனும், தனது ஒரே மகனை இவ்வாறு இழந்து நீதிக்காக போராடி வரும் தாயே, நியாயம் கோரி சட்டத்தரணி பிரிந்தா சந்ரகேஷ் ஊடாக இந்த விஷேட மேன் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், சட்ட மா அதிபர்,  அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பிரதிவாதிகளாகவும்,  மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த சி.ஏ. ரிட் 424/21 எனும் ரிட் மனுவின் மனுதாரர்களான  மருதானையைச் சேர்ந்த ஜமால்தீன்  ஜெனி பஸ்லீன் ஜெனீபர் வீரசிங்க, டொன் மேர்வின் பிரேமலால் வீரசிங்க, தெமட்டகொடவைச் சேர்ந்த  அமீனதுல் ஜிப்ரியா சப்ரீன் ஆகியோர் மனுதாரர் - பிரதிவாதிகளாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் டிலான், மொஹமட் சாஜித் உள்ளிட்ட 11 பேர் 2008 செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போயுள்ளதாக மனுதார்  மனுவில் தெரிவித்துள்ளார்.  

2008 செப்டம்ப்ர் 18 ஆம் திகதி மருத்துவ படிப்புக்காக லண்டன் நோக்கிச் செல்ல தனது மகனான ரஜீவ் நாகநாதன் தயாராக இருந்ததாகவும், 17 ஆம் திகதி இரவு முடி வெட்டிவிட்டு தனது நண்பர்களுக்கு விருந்துபசாரம் அளிக்க சென்ற போதே அவர் காணாமல் போனதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பல மாதங்களுக்கு பின்னர் ரஜீவ் நாகநாதன் 2009 ஜனவரி மாதம் தொலைபேசியில் அழைத்ததாகவும்,  அதன்போது தான் நண்பர்களுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியதாகவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

அதன் பின்னர் பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும்,  அதன் போது தான்  முதலில் ‘பிட்டு பம்புவ’வில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் திருகோணமலை கடற்படை முகாமில் (‘கன் சைட்’ என்ற சட்டவிரோத தடுப்பு முகாமில்) தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும்  ரஜீவ் நாகநாதன் குறிப்பிட்டதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.

திருகோணமலை கன்சைட் பகுதியில் பல  இளைஞர் யுவதிகள் அழைத்து வரப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் தானும் கொல்லப்பட்டு விடுவேனோ எனும் அச்சமாக இருப்பதாக ரஜீவ் நாகநாதன் தன்னிடம் கூறியதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 21-05 - 2009   அன்று தனது மகன் ரஜீவ் நாகநாதனிடமிருந்து இறுதியாக தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இதன்போது அவரையும் அவருடன் சேர்த்து கடத்தப்பட்ட ஏனையோரையும் விடுவிக்க தனிடம் கப்பம் கோரப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்வாறு காணாமல் போனவர்களுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளின் படி, மேற்படி பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிலர் கடத்தப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள “பிட்டு பம்பு” என்ற அறையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் பின்னர் அவர்கள் முன்னாள் கடற்படைத் தளபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான பீட வளாகத்தில் அமைந்துள்ள கன்சைட்  என்ற சட்டவிரோத நிலத்தடி சிறைச்சாலையில்  தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக மனுதாரர்கள்  தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விஷேட  மேன் முறையீட்டு மனுவின் 2ஆவது பிரதிவாதியான வசந்த கரன்னாகொடவின்  நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த கன் சைட் எனும் தளத்தின்  விவகாரங்களில் தலையிட வேண்டாம் என 2ஆவது பிரதிவாதி தனக்கு உத்தரவிட்டதாகவும், 2ஆவது பிரதிவாதியின் கீழேயே அத்தளம் இயங்கியதாகவும்,  முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா   வாக்கு மூலம் வழ்னக்கியுள்ளதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில் காணாமல் ஆக்கப்ப்ட்டவர்கள் அந்த முகாமில்  சட்ட விரோதமாக தடுத்து வைத்திருப்பது பற்றி  2 ஆம் பிரதிவாதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்தமை தொடர்பிலான சான்றுகள் உள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு, 14 வது குற்றவாளியான 2 வது பிரதிவாதி (வசந்த கரன்னாகொட) உட்பட பதினான்கு பேருக்கு எதிராக  மேல் நீதிமன்ற பதிவாளரால் முறையாக கையொப்பமிடப்பட்ட குற்றப்பத்திரிகை, HC(TAB) 1448/2020  எனும் இலக்கத்தின் கீழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு இந்த விஷேட மேன் முறையீட்டு மனுவின் 2வது பிரதிவாதி ஒரு ரிட்  மனுவை தாக்கல் செய்ததகவும்  அதனூடாக  மேல் நீதிமன்ற விசாரணைகளை  இடைக்கால தடை உத்தரவூடாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் 04-08- 2021 அன்று,  வசந்த கரன்னாகொடவுக்கு  எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என  சட்ட மா அதிபர்  முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அரிவித்ததாக மனுதாரர் இந்த விஷேட மேன் முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிகை /அல்லது குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவதற்கு  சட்ட மா அதிபர், மேல் நீதிமன்றில்  பதிவு செய்த முடிவை ரத்து செய்ய கோரி  தாம்  ரிட் மனு தாக்கல் செய்ததாக ம்னுதரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அம்மனு மீதான ஆராய்வின் போது, 01- 11- 2021 அன்று, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பார்வைக்காக,  சட்ட மா அதிபர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சில அறிக்கைகளை இரகசிய அடிப்படையில் தாக்கல் செய்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, அவற்றை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்ரம் 10 - 11 - 2021 திகதி  உத்தரவின் மூலம்  சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு  ஏற்காமல் மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே மேன் முறையீட்டு நீதிமன்றின் அந்த தீர்மானத்தை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றில் விசேட மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ள மனுதாரர், மேன் முறையீட்டு நீதிமன்றின் ரிட் மனுவில் தாம் கோரிய நிவரணங்களை தமக்கு அளிக்குமாறு அம்மனுவூடாக கோரியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33
news-image

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம்...

2025-03-25 11:12:02
news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 11:18:01
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41