ஸ்கொட் போலண்டின் டெஸ்ட் அறிமுகத்துடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Image

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பிரிஸ்போனில் நடந்த முதல் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளினாலும், அடிலெய்டில் நடந்த இரண்டாவது போட்டியில் 275 ஓட்டங்களினாலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி ஞாயிறன்று மெல்போர்னில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 185 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சலக விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், அவுஸ்திரேலிய அணி 82 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது. அந்த அணியின் தொடக்கவீரரான மார்கஸ் ஹாரிஸ் 76 அதிகபடியாக ஓட்டங்களை எடுத்தார். 

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், ரோபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் லீச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 82 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் அவுஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.

போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திருந்தது.

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க, அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது.

இறுதியில் இங்கிலாந்து மொத்தமாக 27.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இரண்டாவது நாளில் சுற்றுலாப் பயணிகளுக்கு பேரழிவு தரும் கடைசி மணிநேரத்தில் அவுஸ்திரேலிய வீரர் போலண்ட் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.

மொத்தமாக 24 பந்துகள் மாத்திரம் பந்துப் பரிமாற்றம் மெற்கொண்ட அவர் 7 ஓட்டங்களை வழங்கி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இன்னிங்ஸ் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

Image

அவர் தவிர மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டினையும் இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Image

தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 5 அன்று சிட்னியிலும், ஐந்தாவது போட்டி ஜனவரி 14 அன்று ஹோபார்ட்டிலும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.