கிளிநொச்சி - பூநகரி கௌதாரி முனை கடலில் குளிக்க சென்ற இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது 22) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று வேனில் கௌதாரிமுனை கடற்பகுதிக்கு நேற்றைய தினம் மாலை சுற்றுலா சென்றுள்ளனர். 

அங்கு வேறொரு பகுதியில் இருந்து வந்திருந்த இளைஞர் குழு ஒன்றுடன் இவர்களுக்கு தர்க்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியுள்ளது. 

அதன் போது ஏற்பட்ட முதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து , அங்கிருந்து இளைஞனை மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அதேவேளை உயிரிழந்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் குழு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். குறித்த இளைஞர் குழு குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்கள் படகொன்றின் மூலமே அப்பகுதிக்கு வந்திருந்தனர் எனவும் , பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.