நேர்கண்டவர் : பா.ருத்ரகுமார் 

ஒவ்வொருவரும் முதுமையை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் அந்த முதுமை சொர்க்கமா நரகமா என்பது நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய விடயமாகும். தேக ஆரோக்கியத்துடன் நூற்றாண்டு காலம் சிறப்புடன் வாழ சுகாதார பழக்கவழக்கங்களின் தேவை தற்போதைய நவீன காலத்தில் நன்கு உணரப்பட்டு வருகின்றது. ஆனாலும் அது பற்றிய தெளிவு முழுமையாக முதியோர்களிடத்தில் உள்ளதா எனும் போது பெரும் கேள்விக்குறி நிலவுகின்றது. அதனை நோக்காகக் கொண்டே முதியோர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்ற நோக்கில் விசேட நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த் அவர்களை நேர்கண்டோம் அதன் முழு விபரம் வருமாறு

நாம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய சவால்களுள் முதியோர் தொகை அதிகரிப்பே பிரதான இடம் வகிக்கும் என்பது உண்மையாகும். எனவே தற்போது முதியோர்களை எந்தெந்த நோய்கள் அதிகமாக தாக்குகின்றன?

முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய நோயை மூன்று வகையாக வேறுபடுத்தலாம். முதலாவது பக்கவாதம் எனப்படும் பாரிச வாதமாகும். இரண்டாது மூளை தேய்வு நோய் மற்றையது நடுக்கு வாதமாகும். இந்த மூன்று நோய்களே பிரதானமாக முதியோர்களை தாக்குகின்றன.

இந்நோய்களின் தாக்கம் எவ்வகையானது எதனால் இந்நோய்கள் ஏற்படுகின்றன என்பது தொடர்பில்

முதலில் பக்கவாதமானது இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல் சக்கரை நோய் போன்றவை காணப்படும் போது முதியோர்களுக்கு அதிகமாக தாக்கும். பாரிசவாதம் பலவகைப்படும். இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பக்க வாதம் ஏற்படும்,இரத்த நாளங்கள் வெடித்து அதனால் ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு என இருவகைப்படும்.

பொதுவாக 80 சதவீதமான பக்கவாத நோய்கள் இரத்த அழுத்தங்கள், கசிவு என்பன காணப்படுவதாலேயே வருகின்றது. ஏனைய 20 சதவீதமானவை இரத்த நாளங்கள் வெடிப்பதால் ஏற்படுவது. பாரிசவாதத்தின் அறிகுறிகளை நோக்கும் போது திடீரென்று கைகால்கள் ஒரு பக்கம் இழுத்துக்கொள்ளல்,பேச்சு இல்லாமல் போதல் ,கண்பார்வை பாதிப்பு என்பன காரணங்களாக உள்ளன.

இவ்வகையான பாரிசவாதம் ஏற்படும் போது மூன்று அல்லது நான்கறை மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பை ஊசியொன்றை செலுத்துவதன் மூலம் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது. ஒருசிலருக்கு மாத்திரமே பொருந்தும்.

பாரிசவாதம் வாழ்நாள் முழுவதும் முதியோர்களை தாக்கும் நோயா? இதனை கட்டுப்படுத்த வழிவகைகள் உண்டா?

பாரிசவாதம் ஒரு முறை வந்தால் அது வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கோ அல்லது இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்தவோ காரணமாக உள்ளது. இதனால் பாரிசவாதம் ஏற்பட்டுவிட்டது என்றால் முழுவதும் மருந்தால் மட்டும் குணப்படுத்துவது சாத்தியமற்ற விடயமாகும். இயன்முறை சிகிச்சையினால் மட்டுமே இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

சிறிய அளவு அடைப்பு ஏற்பட்டால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களை எம்மால் குணப்படுத்த முடியும் ஆனால் பிரதான அடைப்பு ஏற்படும் போது 6 முதல் 9 மாதங்கள் வரையில் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் குணப்படுத்த முடியாத நோயாக மாறிவிடலாம்.

நடுக்குவாதம் என்றால் என்ன?

அதன் அறிகுறிகள் எவை ?

அடுத்ததாக பாக்கிர்ஸன் எனப்படும் நடுக்கு வாதம் கை அல்லது கால், நடுக்கத்துடன் ஆரம்பமாகும். மந்தத் தன்மை பேச்சு கஷ்டம் நடக்கும் போது தள்ளாட்டம் என்பன பிரதான அறிகுறிகளாகும் இந்நோய் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பாதிக்கக்கூடிய நோயாகும். மூளையில் உற்பத்தியாகும் ட்ரோக்கமீன் எனப்படும் சுரப்பி குறைவதனால் ஏற்படக் கூடிய நோயாகும் இந்நோய்க்கு பல வகையான சிகிச்சை காணப்படுகின்றன. முதலில் மருந்துகளை கொடுத்தும் குணப்படுத்த முடியும். அவ்வாறு குணமாகாத போது 70 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு மூளையில் இருதயத்திற்கு பேஸ் மேக்கர் பொருத்துவன் ஊடாக மூளைக்கு சமிக்ஞைகளை வழங்கும் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். சில வகையான பார்கிஸன் நோய்களுக்கு முழுமையான சிகிச்சை கிடையாத போதும் சத்திர சிகிச்சையின் மூலமே அதிக சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

மூளைத்தேய்வு நோய் எவ்வகையில் முதியோர்களை தாக்குகின்றது?

டிமென்சியா எனப்படும் மூளைத் தேய்வு நோய் காணப்படுகின்றது. இதுவே பெரும்பாலான முதியோர்களுக்கு ஏற்படும் நோயாகும். வெளிப்படையாக முதுமையை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இந்நோயின் பிரதான காரணங்களாகவும் உள்ளன. இலங்கையைப் பொறுத்த வரையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 104 நான்கு பேருக்கு இவ்வாறான வருத்தம் காணப்படுகின்றது. இதன் அறிகுறிகளை பார்க்கும் போது ஞாபக மறதியோடு ஆரம்பிக்கும் நோயாகும். தற்போது நடந்தது, தற்போது பேசியது, தற்போது பார்த்தது அனைத்தையும் மறந்து விடுவார்கள் ஆனால் பழைய நினைவுகள் அனைத்தும் சரியாக இருக்கும்.

தாம் எந்தப் பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை மறந்து விடுவதோடு அதனை தேடிக் கொண்டே இருப்பார்கள் பேச்சுத் தடுமாற்றம் ஏற்படும். சில பேருக்கு தெரிந்த வழி தடுமாற்றமாக இருக்கும். பழக்கப்பட்ட இடங்களுக்கு எப்படிப் போய்த் திரும்பி வருவது என்பதை மறந்து விடுவார்கள் வீட்டின் உள்ளேயே சமையலறை எது பூஜை அறை எது படுக்கை அறை அது என்பதைக் கூட மறந்து விடுவார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் கூடக் கூட மன நோய் அல்லது மனவியல் ரீதியிலான சிக்கலை ஏற்படுத்தும் மனச் சோர்வு என்று சொல்லக்கூடிய டிப்லெஷன் சைகோஸிஸ் என சொல்லக்கூடிய மூளைத் தேய்வு நோயும் ஏற்படக்கூடும். சிலபேருக்கு இது தூக்கமின்மையை அதிகரிக்கும். இவை அனைத்துமே டிமென்சியா நோயின் அறிகுறிகளாகும்.

மூளைத்தேய்வு நோய் எதனால் ஏற்படுகின்றது? அதனைக் கட்டுப்படுத்த எவ்வகையான செயற்பாடுகள மேற்கொள்ள வேண்டும்?

அலசைமர் நோயே பிரதான காரணமாக உள்ளது. அமிலோல்ட் எனப்படக்கூடிய புரதம் நரம்புப் பகுதிகளில் படிந்து முதலில் ஞாபக நரம்புகளை முதலில் தாக்கி பின்னர் மற்றைய பகுதிகளுக்கு பரவும் முதலில் இது நினைவாற்றலை தடுக்கச் செய்யும். இது மற்ற இடங்களுக்கு பரவும் போது பேச்சுத் திறன் குறைவு, வழித்தடுமாற்றம் இதுவரைக்கும் பழக்கப்பட்ட விடயங்களை மறப்பது போன்ற நோய்கள் ஏற்படும்.

இரண்டாவது அறிகுறி மூளையில் ஏற்படக்கூடிய சைலன்ஸபு ஸட்ரோக் அதாவது மூளையில் இரத்த அழுத்தம் ஏற்படும் போது பாரிசவாதம் ஏற்படும் சிலருக்கு அது மூளையில் சிறு நரம்புகளை தாக்கும் போது ஞாபக சக்தியை பெரிதும் பாதிக்கும். சிலருக்கு நடக்கும் போது சமநிலை அற்றுப்போதல். அல்லது சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை என்பன ஏற்படும் மூன்றாவதாக பார்கிஸன் வர்க்கம் தோன்றி 8 முதல் 10 வருடங்களுக்குள்ளாக 50 தொடக்கம் 75 சதவீதமானவர்களுக்கே டிமென்சியா நோய் ஏற்படும்.

இந்நோயில் ஞாபக மறதியோடு சேர்த்து மன நோய் ஏற்படும் ஆட்கள் இல்லாத போது ஆட்கள் தென்படுவது போலவும் சிறு சிறு மிருகங்கள் அறையில் விளையாடுவது போலவும் மாயை உருவாக்கிக்கொள்வர்.அடுத்ததாக மூளைக்குள்ளாக இருக்கும் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதனால் ஏற்படக்கூடியது. இதுவும் வயதானவர்களை தாக்கும் நோயாக உள்ளது முதலில் இது ஞாபக மறதி நோயாக ஆரம்பிக்காது நடப்பதில் சிரமம் ஏற்படும் சிறு சிறு அடியெடுத்து நடப்பார்கள் திரும்புவது கஷ்டமாக இருக்கும். முதல் இரு அடிகளை எடுத்து வைப்பது கடினமாகும். அத்தோடு அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். சில நேரங்களில் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதன் பின்னரே இந்நோய் ஞாபக மறதிக்கு இட்டுச் செல்லும் பின்னர் பேச்சுக் குறைபாடு ஏற்படக்கூடும். இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் மருந்துகள் பயனளிக்காத போது சில அறுவைச் சிகிச்சை மூலமாக மூளையில் அதிகமாக காணப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தும் . இந்நோய் வயது முதிர்ந்தவர்களுக்கும்,வீட்டில் மற்றவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டிருந்தால் இரத்தக் கொதிப்பு கொழுப்பு அதிகமாக காணப்படுவதாலும் முறையான சிகிச்சை பெறாத போதும் இவ்வகையான டிமென்சியா நோயை ஏற்படுத்தும்

டிமென்சியா நோயை பொறுத்தமட்டில் சிலவற்றையே நம்மால் கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலானவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. இதனால் இந்நோயை வராமல் தடுப்பதற்காக முன்கூட்டிய நடவடிக்கைகளே அவசியமாகின்றது. வராமல் தடுப்பதற்கு மூளையின் ஆற்றலை எப்போதும் அதிகரித்துக்கொள்ள வேண்டும் அதிகமாக புத்தகம் படிக்க வேண்டும்.

தினமும் சுடோக்கு அல்லது குறுக்கெழுத்துப் போட்டிகளை செய்து பார்க்க வேண்டும். இரத்தக் கொதிப்பு, சக்கரை நோய், கொழுப்பு அதிகரித்தல், என்பன காணப்படுமாயின் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக மது அருந்துதலை குறைத்துக்கொள்ள வேண்டும் புகைத்தலை முழுமையாக கைவிட வேண்டும். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்துகொண்டு வர வேண்டும்.

ஞாபக மறதி முதியோர்களுக்கான செயற்பாடுகளை பாதிக்கும் முதற் காரணியாகும் அதனை முன்கூட்டியே இனம் கண்டு கொள்வது எப்படி?

பெரும்பாலான முதியோர்களுக்கு மனச் சோர்வினால் இவ்வகையான ஞாபக மறதி ஏற்படும். இவ்வகையான மன அழுத்தம் பிற்காலத்தில டிமென்சியா நோயை ஏற்படுத்தக்கூடும் இந்த மனச்சோர்வு நோயின் அறிகுறிகளை நோக்கும் போது தூக்கம் இன்மை பசியின்மை சந்தோஷம் இன்மை செயல்களில் நாட்டம் குறைதல் எப்போதும் சோர்வாக உணர்தல் என்பன காணப்படுகின்றன. இவ்வாறான அறிகுறிகள் ஏதாவது காணப்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படாத போது அடுத்த சில வருடங்களில் ஞாபக மறதி நோய்க்கு இது கொண்டு செல்லும். ஞாபக மறதியை இலகுவாக நாம் கண்டு பிடிப்பதற்கு நோயாளியை நன்கு தெரிந்த ஒரு நபரிடம் கேள்வியைக் கேட்டு இவருக்கு எந்த வகையிலான ஞாபக மறதி காணப்படுகின்றது என்பதையும் எத்தனை நாளாக காணப்படுகின்றது என்பதையும் எவ்வாறு இது ஆரம்பித்தது என்பதையும் கண்டறிந்து அதன் பிறகு பாதிக்கப்பட்ட நபருக்கு ஞாபக சக்தி சிகிச்சை அளிப்போம்.

இந்த சிகிச்சையோடு சேர்த்து மனச்சோர்வுக்கான பட்டியலை அவர்களிடத்தில் வழங்குவோம். அவை ஞாபக மறதி தென்படுமாயின் எந்த அளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதனையும் தினமும் எந்த அளவு மறதி ஏற்படுகின்றது என்பதையும் கண்டறிய வேண்டும். இதற்குப் பிறகு மூளைக்கு ஸ்கேனிங் செய்ய வேண்டும். சீ.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஸ்கேனிங்கை இதற்கு செய்யலாம் அதற்கு பிறகு இது டிமென்சியா நோயா என்பதை கண்டுபிடிக்கலாம்.

மனச்சிதைவு நோயானது அவர்கள் வைத்த பொருளை தேடிக்கொண்டே இருப்பது தான் வைத்த பொருள் களவு போய்விட்டதாக நினைப்பது சந்தேகப்படுவது இப்போது இருக்கும் வீட்டை ஞாபகம் வைத்துக்கொள்ளாது சிறு வயதில் இருந்த வீட்டையே ஞாபகம் வைத்துக்கொள்ளல். இது எனது வீடு இல்லை. எனது வீட்டிற்கு கூட்டிட்டு போ என்றவாறு அலறுவது ஞாபக மறதியின் போது கண்ணுக்கு காட்சி தோன்றுதல் தனியே பேசிக்கொண்டிருத்தல் வீட்டில் உள்ளவர்களையே அடையாளம் தெரியாதிருத்தல் போன்ற மன ரீதியான நோய் தீவிரமடையும் போது இவை ஏற்படக்கூடும்.

ஞாபக மறதியை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியாத போதும் மனச்சோர்வு, மனச்சிதைவு, டிமென்சியா போன்ற ஏனைய பிரச்சினைகளுக்கு சிகிச்சைகள் உண்டு. ஞாபக மறதிக்கு சிகிச்சை இல்லை என்பதனால் உலகம் முழுதும் அதற்கான சிகிச்சை முறையை வைத்தியர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.

அவ்வாறெனில் ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த இயலாதா?

நமது நாட்டில் ஆயுர்வேத சிகிச்சை அதிகமாகக் காணப்படுவதால் அதனை நம்பி அதிகமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிராமி அல்லது வல்லாரை என்று சொல்லப்படக் கூடிய மருந்துகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மருந்தாக சொல்லப்பட்டு வருகின்றது. இம்மருந்துகளை ஆங்கில மருந்துகளோடு ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஞாபக மறதியின் ஆரம்ப கட்டங்களை கண்டுபிடித்து பிராமி அல்லது வல்லாரையுடனான கலவையை வழங்கி ஞாபக மறதியை இது அதிகரிக்கின்றதா என்பதை பரிசோதித்து வருகின்றோம்.

மேலும் ஞாபக மறதியை கண்டு கொள்வதற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பயன்படுத்திய முறைகளையே நாமும் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் அது நம் நாட்டு முதியோர்களுக்கு எந்த அளவு தூரம் பயனளிக்கின்றது என்பதில் சந்தேகம் நிலவுகின்றது. இதனால் நம்நாட்டில் உள்ளவர்களுக்கு பொருந்தும் வகையிலான ஞாபக மறதி அடையானப்படுத்த பட்டியலை நாம் தயாரித்துள்ளோம்.

அதனையே சிகிச்சையின் போதும் பயன்படுத்துகின்றோம். எவரேனும் ஞாபக மறதி நோய்க்கான சிகிச்சை எடுக்கும் போது சிகிச்சையை பெற வேண்டுமாயின் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றை குறைத்து சாப்பிட வேண்டும்.

கடந்த 10 வருடங்களில் 600 ஞாபக மறதி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்துள்ளோம். அவர்களில் ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு குறைவானவர்களாகவே உள்ளனர். ஆகவே மூளைத் தேய்வு நோய் வயதானவர்களை மட்டும் தாக்கும் நோய் என வரையறுத்துவிட முடியாது.

எனவே முதியோர்கள் நோய்கள் தொடர்பில் முன்கூட்டியே அவதானத்துடனும் நோய் அறிகுறிகள் தொடர்பில் பூரண அறிவுடையவர்களாக இருப்பதே முக்கியமானதாகும். அதற்கென தொடர்ச்சியான வைத்திய அறிவுரைகளையும் சுகாதார பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.