மக நெகும வீதி நிர்மாண இயந்திரக் கம்பனியின் பூரண மேற்பார்வையின் கீழ்  முன்னெடுக்கப்படும் படகமுவ வாகனத் தரிப்பிடம் மற்றும் சுகாதார வசதி நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக  ஆளும் தரப்பு பிரதம  கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் அங்கு  மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார்.  

விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்.

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமன்றி ஏனைய வீதிகளிலும் நாளொன்றுக்கு சுமார் எட்டு பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்குறிய  நிலையாகும். இதை குறைக்க உலக வங்கியும் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் விபத்துகளை குறைக்கும் வகையில் ஒரு விசேட  வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம்.

ஜனவரி இரண்டாவது வாரத்தில் திட்டத்தை தொடங்குவோம். பலர்  நித்திரை காரணமாக  விபத்துக்குள்ளாவதை நாம் பார்த்திருக்கிறோம். 

எனவே, முதலில் தம்புள்ளைக்கு அப்பால் இளைப்பாறும் இடமொன்றை நிர்மாணிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காப்புறுதி  நிறுவனங்களுடன்  இணைந்து,  வாகனங்களை  நிறுத்திவிட்டு சிறிது நேரம்  தூங்குவதற்கான  ஒரு இடத்தை  ஆரம்பிக்க இருக்கிறோம்.

இந்த திட்டம் தற்போதைய விபத்து விகிதத்தை சுமார் 90% குறைக்கும் என நம்புகிறோம். இது நமது இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல்,   விபத்துக்களுக்காக செலுத்த வேண்டிய பாரிய   செலவினங்களிலிருந்து அரசாங்கத்தையும் காப்பாற்றுகிறது. எனவே, அந்த விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.

உலகம் முழுவதும் கோவிட் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளது. பலம் வாய்ந்த நாடுகளில் கூட வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

ஆனால்  தொற்று நோய் நிலைமையில்   பொருட்களின் விலையை அதிகரிக்காமல் எப்படியாவது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருகிறோம். ஆனால் நாங்கள்  விருப்பமில்லாத நிலையிலும் கூட  இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. வேறு வழியில்லை.

 பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அமைச்சர்,

 பொருட்களின் விலை மேலும் உயர்ந்து வருகிறது. தொற்றுநோயிலிருந்து விடுபடும் வரை இந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை புத்தியுள்ள மக்கள்  புரிந்து கொள்ள வேண்டும். யார் பொருட்களின் விலையை அதிகரிக்க விரும்புகிறார்கள்.

இது அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் ஒன்று. விருப்பமில்லா நிலையிலும் கூட நாம் அனைவரையும் பாதுகாக்கக் கூடிய  ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும். 

அந்த இழப்பை ஈடுகட்ட அனைவரிடமும் வரி வசூலிக்க வேண்டும். வாகனங்களை பயன்படுத்தாதவர்களும் வரி செலுத்த வேண்டும். நஷ்டத்தை ஈடுகட்ட வரி விதிக்கப்படும்போது, வாகனம் பயன்படுத்தாதவர்கள் கூட வரி செலுத்த வேண்டியுள்ளது. அதனால் விருப்பமின்றி  இந்த முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள எரிவாயுவின் கலவை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

எரிவாயு தொடர்பில்  பிரச்சினை உள்ளது. இது ஒரு கவலைக்குரிய நிலை. இது  குறித்து கவனிக்கப்பட வேண்டும். இங்கு ஒரு நாசகாரசெயல்   இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால் அரசாங்கம் என்ற வகையில் இதனை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. நாட்டுக்கு வந்துள்ள கப்பல்களை பார்த்து சான்றிதழ் பெற்று அதை பற்றி  ஆராய  வேண்டும். இந்த புத்தாண்டு காலத்தில்  மக்கள் கஷ்டப்படுவதற்கு இடமளிப்பது நல்லதல்ல. ஒவ்வொருவருடைய குறைபாடுகளும் இதற்குக் காரணம் என்று நான் பார்க்கிறேன்.

கூட்டணிக்  கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயாராகி வருவதாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.

அது  பற்றி எனக்குத் தெரியாது. அதை  அவர்களிடம் கேட்க வேண்டும். யாருக்கும் ஒதுங்கிச் செல்லமுடியும்.அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை. அவர்கள் வெளியேறினாலும் அரசாங்கத்தை வீழ இடமளிக்க மாட்டோம்.   எமது பக்கமிருந்து சென்றால் எதிரிணியில் இருந்து எமது தரப்பிற்கு  சிலரை எடுப்போம். 

கோவிட் காரணமாக நாங்கள் மெதுவாக பயணித்தாலும், அரசாங்கத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  அரசாங்கத்தை விட்டு வெளியேற நினைப்போர் இருப்பார்கள்.வர இருப்பவர்களும் இருப்பார்க்ள.  நாம் அந்த விடயங்களை தந்திரமாக செய்கிறோம்,  அவற்றை விளம்பரப்படுத்தி  செய்யமாட்டோம்

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வருவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

 வௌிநாட்டுக்  கையிருப்பு இழந்தால் அரசு கவிழும். ஆனால் அவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம். எமக்கு மிகத்  திறமையாக அரசாங்கத்தை கையாள முடியும். எதிர்க்கட்சிகள் வௌிநாட்டுக்  கையிருப்பை இழக்க விரும்புகின்றன. அநுரவின் கும்பலும் பிரேமதாச கும்பலும் அரசாங்கம் கவிழும் வரை பகல் கனவு காண்கிறார்கள். இந்த நாட்டில் மக்களின் விலைவாசி உயர வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. 

ஏனெனில் அப்போது   ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்கள். இந்த நாடு  வங்குரோத்தாகி வருகிறது. வங்கிகளில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என   ஒரு முஸ்லீம்  நபர்  வீடியோ பதிவிட்டுள்ளதை  பார்த்தேன். இதற்கெல்லாம் பின்னால் எதிர்க்கட்சி இருக்கிறது.   ஆட்சிக்கு வருவதற்கு ஒரு நாடு இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கவில்லை. 

எதிர்க்கட்சிகள் எங்களுடன் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவதை  விரும்பவில்லை. இந்த நாடு எப்படியாவது அழிந்துவிட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஆனால் அது எங்களின் விருப்பமோ, மக்களின் விருப்பமோ அல்ல. இந்த நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடையும் என்பது எங்களின் நம்பிக்கை. எமது ஜனாதிபதி சரியான தீர்மானங்களை எடுத்து இந்நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாத்து இந்த நாட்டை உருவாக்குவார் என நான் நம்புகிறேன். ஒரு உலகமாக நாம் இந்தப் பேரழிவிலிருந்து விடுபட முடியும் என்றார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.