(எம்.ஆர்.எம்.வசீம்)

போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகளை பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் இருந்து  பெறுவதற்கு சுமார் 08 மாதங்கள் வரை செல்கின்றது.

அதனை இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். அத்தகைய அறிக்கைகளை உடனடியாக பெற்றுக் கொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் ஏனெனில் குற்றவாளிகளை விளக்கமறியலில் வைத்தோ அல்லது சிறையில் அடைத்தோ குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பின் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உதவியுடன் சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் உத்தியோகபூர் இலச்சினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

குற்றவாளிகளை விளக்குமறியலில் வைத்தோ அல்லது சிறையில் அடைத்தோ குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாது.

குறிப்பாக போதைப்பொருள் சம்பந்தமான குற்றச்செயல்களின்போது போதைப்பொருள் எடுத்துவரப்படும் சர்வதேச வியாபாரிகள், இலங்கைக்குள் விநியோகிப்பவர்கள், சமூகத்துக்குள் கொண்டு செல்பவர்கள் அதேபோன்று போதைக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இருக்கின்றனர். அவர்களை பிரித்தறிந்துகொள்ளவேண்டும். 

வியாபாரிகள் மற்றும் விநியோகிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும். போதைக்கு அடிமையாகி இருப்பவர்களை புனர்வாழ்வளித்து தொழில் பயிற்சிகளை வழங்கி சிறந்த பிரஜையாக அவர்களை சமூகத்துடன் அனுப்பவேண்டும்.

அத்துடன்  போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகளை பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் இருந்து  பெறுவதற்கு சுமார் 08 மாதங்கள் வரை செல்கின்றன.

அதனை  ஒரு மாத காலத்துக்குள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். என்றாலும் அதனை இரண்டு வாரங்கள்வரை குறைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். 

அத்தகைய அறிக்கைகளை உடனடியாக பெற்றுக் கொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.  அதற்காக பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

மேலும் சிறைச்சாலைகளுக்கு கைதிகளை அனுப்புவதன் மூலம் ஏற்படும் நெருக்கடியை குறைப்பதற்காக சிறிய குற்றம் செய்த நபர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்த பின்னர், அவர்களை கண்காணித்து சமூகத்துக்கு ஆராேக்கியமான பிரஜைகளை ஏற்படுத்துவது இந்த திணைக்களத்துக்கு சாட்டப்பட்டிருக்கும் கடமையாகும். 

கடந்த 22 வருடங்களாக சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களம் பாரிய சேவையை மேற்கொண்டு வருகின்றது. என்றாலும் இதுவரை இந்த திணைக்களத்துக்கு இணையத்தள தரவு தகவல் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றார்.