மூத்த இயக்குனர் கே எஸ் சேதுமாதவன் காலமானார்

By T Yuwaraj

24 Dec, 2021 | 11:55 AM
image

தமிழ் திரை உலகிலும், மலையாள திரை உலகிலும் சிறந்த ஆளுமையாக அறியப்பட்ட இயக்குநர் கே. எஸ். சேதுமாதவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

1960ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் கே எஸ் சேது மாதவன். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றதுடன் மட்டுமல்லாமல், பத்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். 

1962ஆம் ஆண்டில்  'கண்ணும் கரளும்' என்ற படத்தின் மூலம் உலக நாயகன் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையில் அறிமுகப்படுத்தியவர். தமிழில் 'நாளை நமதே ', ,'மறுப்பக்கம்', 'நம்மவர்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். 

90 வயதான இவருக்கு முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.

சேதுமாதவன் மறைவு குறித்து உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய சுட்டுரையில், ''காலத்தால் அழியாத காவியங்களை திரையில் படைத்த கே எஸ் சேதுமாதவன்.. புதிய அலை சினிமாவின் ஊற்று முகம். மலையாள சினிமாவின் தரத்தை தீர்மானித்த அடிப்படை விசைகள் ஒருவர். தன் கலை சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்..'' என பதிவிட்டிருக்கிறார்.

மறைந்த இயக்குநர் கே எஸ் சேது மாதவனுக்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாள திரையுலகிலிருந்து ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right