மன்னார் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொக்றோயின் என்ற போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க மன்னார் பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ உத்தரவுட்டுள்ளார்.

மன்னார் தலைமன்னார் வீதியில் செல்லும் முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருள் கடத்திச் செல்வதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் மன்னாருக்கும் பேசாலைக்கும் இடையே குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனையிட முற்பட்டபோது, இதிலிருந்து ஒருவர் தப்பியோட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் இவர்களிடமிருந்து 191.5 கிராம் கொக்றோயின் என்ற அபாயகரமான போதைப் பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக் கிழமை நண்பகல் இடம்பெற்ற இவ்சம்பவத்தைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மன்னார் பொலிஸார் நேற்று பிற்பகல் மன்னார் பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது, பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு எற்ப இவ்விருசந்தேக நபர்களையும் ஒரு வாரத்துக்கு பொலிஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க கட்டளையிட்டுள்ளார்.

அத்துடன் தப்பியோடிய சந்தேக நபரைத் தேடி பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கொக்றோயின் என்ற போதைப் பொருள் மன்னாரில் இதுவே முதல்முறையாக கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(வாஸ் கூஞ்ஞ)