(என்.எப்.எம்.பஸீர்)

பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடங்கிய சேதன பசளையை நாட்டிற்கு அனுப்பிய சீன நிறுவனமான  குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் , அதன் இலங்கை பிரதிநிதிக்கு   பணம் செலுத்துவதை தடுத்து மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால இந்த தடை உத்தரவை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 06 ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் நேற்று (23) தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த பசளையைக் கொண்டுவந்த சீன நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை தடுத்து, மக்கள் வங்கி மற்றும் உள்ளூர் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜிந்தாவோ சீவிங் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட சேதனைப் பசளையில் தீங்கிளைக்கக்கூடிய பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வரையறுக்கப்பட்ட உர நிறுவனமும் கொமர்ஷல் உர நிறுவனமும் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தன.

அவற்றை ஆராய்ந்து, சீன உர நிறுவனம், அதன் உள்ளூர் நிறுவனத்திற்கு கடன் கடிதத்திற்கான கட்டணத்தை செலுத்துவதை தடுத்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இவ்விரு வழக்குகளும் நேற்று (23) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் போதே தடை உத்தரவை நீடித்து உத்தரவிடப்பட்டது.