(எம்.மனோசித்ரா)

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போது காணப்பட்டிருக்குமாயின் எவ்வித பிரச்சினைகளும் தோற்றம் பெற்றிருக்காது.

எனவே மங்களவின் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படுவது எரிபொருள் விலை குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையின் காரணமாகவே பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. எனவே இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்வடையும்.

டொலரின் பெருமானம் 203 ரூபாவாகக் காணப்படுகின்ற போதிலும், கருப்பு சந்தைகளில் 240 ரூபாவிற்கு டொலர் வழங்கப்படுகிறது. எனவே நிச்சயம் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை 10 டொலரினால் குறைவடைந்துள்ளது. கடந்த காலங்களில் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூடிய சூழல் காணப்பட்ட போது அரசாங்கம் விலையை அதிகரிக்கவில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் விலை அதிகரிக்கப்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தினை ஈடு செய்திருக்க முடியும். அதனை விடுத்து உலக சந்தையில் எரிபொருள் குறைவடையும் போது உள்நாட்டில் விலையை அதிகரித்துள்ளமையே பிரச்சினைக்கான காரணமாகும்.

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போது காணப்பட்டிருக்குமாயின் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்காது. முன்னரே செய்திருக்க வேண்டிய விலை அதிகரிப்பு இப்போது செய்யப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரிய காரணியாகும். 

மங்கள சமரவீரவின் எரிபொருள் விலை சூத்திரம் அமுலில் இருந்திருந்தால் உலக சந்தையில் விலை உயரும் போது உள்நாட்டில் விலை உயர்வும் , உலக சந்தையில் விலை குறையும் போது உள்நாட்டில் விலை குறைவும் ஏற்பட்டிருக்கும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போது அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் விலை அதிகரிக்கப்படாமலிருந்தது. அதனால் தற்போது எடுத்துள்ள இந்த தீர்மானத்தினால் மக்கள் மத்தியில் அரசாங்கம் தூற்றுதலுக்கு உள்ளாகியுள்ளது. 

எனவே இவ்வாறான நெருக்கடிக்கு விலை சூத்திரமே தீர்வாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும். இது அரசாங்கம் என்ற ரீதியில் அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானமாகும். அரசாங்கத்தில் இதற்கான சாதகமான சூழல் காணப்படுவதாக எண்ணுகின்றோம். 

எவ்வாறிருப்பினும் நாடு என்ற ரீதியில் ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது தற்போது முக்கியத்துவமுடையதாகும்.