சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தவிர்க்க முடியாதது

23 Dec, 2021 | 09:01 AM
image

கேள்வி ; டொலர் வருகையை  அதிகரித்துக் கொள்வதற்கு நாம் அவசரமாக செய்ய வேண்டிய விடயங்கள் என்ன?

பதில் ; தற்போதைய சூழலில் முக்கியமாக சிந்திக்கவேண்டிய விடயமாக இது உள்ளது. இது   பொருள்  ஏற்றுமதி வருமானத்தை   அதிகரிப்பதன் மூலமே இந்த நெருக்கடிக்கு நீண்ட காலத்தில் தீர்வு காணமுடியும்.  இங்கு ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மிக அவசியமாகின்றது. உதாரணமாக ஏற்றுமதி பன்முகப்படுத்தலில் ஈடுபட்ட நாடுகள் இந்த துறையில் வெற்றியடைந்திருப்பதை காணமுடிகிறது. கிழக்காசிய நாடுகள், ஜப்பான்,  சீனா கூட  ஏற்றுமதி பன்முகப்படுத்தலின் ஊடாகவே முன்னேறி வந்திருக்கின்றன.   

எனவே ஏற்றுமதி பன்முகப்படுத்தலின்றி இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவரமுடியாது. ஏற்றுமதிகளை பன்முகப்படுத்துவது என்பது உயர் பெறுமதி,  தரங்களைக் கொண்ட ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிலைமைக்கு இலங்கை மாற வேண்டும்  என்பதாகும். அதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகின்றன. 

சர்வதேச தொழில்நுட்பங்கள் அவசியம்.    வெளிநாட்டு முதலீடுகளை தவிர்த்து ஏற்றுமதியை அதிகரிப்பது  நடைமுறையில் சாத்தியமற்றது. சுற்றுலாத்துறை ஒரு சேவை ஏற்றுமதி வருமானத்தை கொடுக்கும் மூலமாகும்.    ஆனால் சுற்றுலாத்துறை என்பது எந்தளவு தூரம் மிக வேகமாக உடனடியாக பாதிக்கப்படக்கூடிய துறை என்பதை கொரோனா தொற்றின்மூலம்  புரிந்துகொண்டோம். முட்டைக்கோது உடைந்து நொறுங்குவது போன்ற சுற்றுலாத்துறையின் சகல பாகங்களும் இந்தகாலத்தில் வீழ்ச்சியடைந்தன. 

ஆனால்  சுற்றுலாத் துறையை தீவிரமாக   நம்புவதில்  சில நியாயங்களும் இருக்கின்றன. சுற்றுலாத்துறை இலகுவாகவும் விரைவாக கட்டியெழுப்பப்பட கூடியதாகவும் இருக்கின்றது. ஆனால்  அது எப்போதுமே ஆபத்துமிக்க ஒரு வருமான மூலமாகவே இருக்கும்.   மாலைதீவு சுற்றுலா துறையை முழுமையாக நம்பியிருக்கிறது. சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்ற நாடுகள்   ஆரம்பத்தில் சுற்றுலாத்துறையை நம்பினாலும்  அந்நாடுகள் கைத்தொழில் துறையை கட்டியெழுப்பின.   அதில் அந்த நாடுகள் காட்டிய அக்கறையே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக உள்ளது.   

இலங்கையில்  அவ்வாறானதொரு துறையை  கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்படவில்லை.  அவ்வாறான  ஒரு கைத்தொழிலை நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக தற்போது ஆசிய பிராந்தியத்தை பொறுத்தவரையில் பெறுமதி சங்கிலி என்பது மிகப் பிரபலமாக இருக்கின்றது.   ஒரு நாட்டின் ஏற்றுமதி இன்னொரு நாட்டின் இறக்குமதியாக இருக்கின்றது.   

ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை முழுமையாக உற்பத்தி செய்வதில்லை. தாங்கள் எந்தத்துறையில் சிறப்புத் தேர்ச்சி அடைந்துள்ளோமோ அந்த ஒரு பகுதியை மட்டும், உதிரிபாகத்தை மட்டும் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஆசிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.  எனவே இதில் எந்த ஒரு நாடும் போட்டியாளர்களாக பார்க்கப்படவேண்டிய அவசியமில்லை. 

இவ்வாறு உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும்போது அது பரஸ்பர வர்த்தக தொடர்பை மேலும் வலுப்படுத்துகிறது. அப்படி செய்யும்போது ஒரு பொருள் உற்பத்தியில் பல நாடுகளும் சம்பந்தப்பட்ட வேண்டிய தேவை ஏற்படும்.  இந்தியாவும் இந்த பெறுமதி சங்கிலி திட்டத்தில் தன்னை மிகப்பெரிய அளவில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.  இலங்கையும்  இவ்வாறானதொரு பெறுமதி சங்கிலியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்  டொலர் வருமானத்தை அதிகரிக்க முடியும். 

கேள்வி ; டொலர் வெளியே செல்வதை கட்டுப்படுத்துவதற்கு இறக்குமதியை கட்டுப்படுத்துவது   தீர்வா? 

பதில் ; இறக்குமதி பதிலீடு என்பது நெருக்கடி நிலை ஒன்று ஏற்படுகின்றபோது  ஒரு தற்காலிக தீர்வாக அமையும்.  இறக்குமதி கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் ஏற்றுமதி வருமானமும் குறைவடையும். இவை ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றன. அதேபோன்று கைத்தொழிலையும் குறிப்பிடலாம்.   தற்போதைய சூழலில் நாடுகள் தமது வர்த்தகத்தை பாதுகாத்துக்கொள்ள கட்டுப்பாடுகளை விதித்தாலும் இறக்குமதி  பதிலீட்டு உபாயம் என்பது காலம்கடந்த ஒரு உபாயமாகவே இருக்கிறது. 

கேள்வி ; சர்வதேச கடன் தரப்படுத்தல் என்பது? 

பதில் ; ஒரு நாட்டின் வெளிநாட்டுத்துறையின்   ஆரோக்கியத்தை அளந்துகூறுகின்ற சர்வதேச தர நிர்ணயங்களை வெளிக்கொண்டுவருகின்ற கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் உள்ளன. மூடி மற்றும் பிட்ச் ஆகிய நிறுவனங்களை குறிப்பிடலாம்.  இந்த நிறுவனங்கள்  ஒருநாடு கடன் பெற்றால் அதனை எவ்வாறு மீள் செலுத்தும் என்பது தொடர்பான குறிகாட்டிகளை வெளியிடும்.  உலகளாவிய ரீதியில் பிச், மூடி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கடன் பெற முடியுமா  எனபது குறித்த குறிகாட்டிகளை வெளியிடுகின்றன. குறித்த நாட்டின் நிறுவனங்கள் வெளியிடுகின்ற புள்ளிவிபரங்களைக்கொண்டே இந்த குறிகாட்டிகள் வெளியாகும். மிக அண்மையில் பிட்ச் நிறுவனம் இலங்கையினுடைய பொருளாதாரத்தை ஆய்வுசெய்து இலங்கையின் கடன் தர குறிகாட்டியை  ஒருபடி கீழே நகர்த்தி இருந்தது.  இது இலங்கையானது வெளிநாட்டு கடன்களை  பெறுவது குறித்த ஆற்றலையும் குறைக்கிறது.  

கேள்வி ; தற்போது இலங்கை சில நாடுகளுடன் நாணய மாற்று   திட்டங்களை மேற்கொள்வதாக கூறுகிறதே? 

பதில் ; கடன்கள் பெறுகின்ற திட்டத்தின் ஒரு கருவியாக இந்த நாணய மாற்று திட்டத்தை இலங்கை மேற்கொள்கிறது. இந்த நாணய மாற்று திட்டம் என்பது  ஒரு நாட்டுடன் இலங்கையானது ஒரு நாணய பரிமாற்றம் செய்வதை  குறிக்கின்றது.  முக்கியமாக இலங்கை மற்றுமொரு நாட்டிடம் இலங்கையின் ரூபாவை கொடுத்துவிட்டு டொலர்களை பெற்றுக்கொள்ளும்.  ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மீண்டும் அந்த டொலரை கொடுத்துவிட்டு ரூபாவை பெற்றுக் கொள்ளும்.  அதன்போது அதற்காக ஒரு சிறிய வட்டி செலுத்தப்படலாம்.   இது ஒரு கடன்கருவியாக காணப்படுகிறது. 

கேள்வி ; சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான தலையீட்டை நாடுகளில் செய்கிறது?  

பதில் ;  சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் குறைகள் நிறைகள் ஏற்படும்போது டொலர் நெருக்கடி ஏற்படுகின்றபோது சர்வதேச நாணய நிதியத்தை  நாடி குறுங்கால மற்றும் நீண்டகால கடன் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.  அவ்வாறு  கடன்களைப் பெற்றுக் கொள்ளும்போது அந்த நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பது பற்றிய  ஆலோசனைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு சர்வதேச நாணய நிதியம் கடன்களை வழங்கும். இதனைத்தான் சர்வதேச நாணய நிதியத்தை நாடும்போது அது நிபந்தனைகளை விதிக்கிறது என்று கூறுகின்றனர்.      சர்வதேச நாணய நிதியத்தை நாடுகின்றபோது  அதற்குரிய விருப்ப   கடிதத்தை அந்த நாடு வெளிப்படுத்தவேண்டும்.   அந்த கடிதத்தின் பெயரில் சர்வதேச நாணய நிதியம்  தனது அதிகாரிகளை அந்த நாட்டுக்கு அனுப்பி அந்த நாட்டின் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் பேசவைக்கும். அதனடிப்படையில் குறித்த நாடடின் நிதியமைச்சின் அதிகாரிகளும்  நாணய நிதிய அதிகாரிகளும் ஒன்றிணைந்து விடயங்களை ஆராய்ந்து ஒரு கூட்டறிக்கை தயாரிப்பார்கள். அதிலேயே  குறித்த நிபந்தனைகள் உள்ளடங்கும். 

கேள்வி ; சர்வதேச நாணய நிதியம் விதிக்கின்ற பொதுவான நிபந்தனைகள் என்ன?  

பதில் ; அரசாங்கத்தின் செலவை    குறைத்தல்,    வருவாயை கூட்டுதல் ,    ஊழல் வீண்விரயம் போன்றவற்றை தடுப்பதற்கு கடுமையான  நடவடிக்கை எடுத்தல்.  ரூபாவின் பெறுமதியை   சந்தையே     நிர்ணயிக்கும் விதமாக ஏற்பாடுகளுக்கு செல்லல்,    இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல்,   வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை குறைத்தல்,  பொது படுகடனை கட்டூப்பாட்டுக்குள் கொண்டு வருதல்  நட்டம்ஈட்டும் அரச துறை நிறுவனங்களை மீள்கட்டமைப்புக்கு உட்படுத்தல்  அல்லது அரச தனியார் கூட்டாண்மை முயற்சிக்கு உட்படுத்துதல்  மற்றும்  குறிப்பிட்ட நாடுகளின் தனித்துவ நிலைக்கு ஏற்ப சில பரிந்துரைகள்   ஆகிய நிபந்தனைகள் முன்வைக்கப்படும்.  சர்வதேச நாணய நிதியம் தற்போது அதன் நிபந்தனைகளை தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருவதையும் காணமுடிகிறது.  

கேள்வி ; இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான தொடர்புகள் எவ்வாறு இருந்து வந்திருக்கின்றன ?

பதில் ; மிக ஆரம்ப காலத்திலிருந்தே அதாவது  சர்வதேச நாணய நிதியம் எப்போது உருவாக்கப்பட்டதோ அப்போது இருந்தே அங்கத்துவ உறுப்பு நாடாக இலங்கை இருந்துவந்திருக்கிறது.  இலங்கைக்கு முதன் முதலாக சென்மதி நிலுவை அதாவது  டொலர் பிரச்சினை வந்தபோது அதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் ஒரு கடனை பெற்றுக்கொண்டது.  1980களின் பின்னர் இலங்கை படிப்படியாக 16 தடவைகள்   சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்களை பெற்றுள்ளது. 

கேள்வி ; தற்போதைய (2021 டொலர் நெருக்கடி)  இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது முக்கியமா ? அதனால் ஏற்படும் விளைவு என்ன? 

பதில் ; இரண்டு சாதக விளைவுகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும். முதலாவது  அவ்வாறானதொரு நிறுவனத்துடன் இணைந்து நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப   முயல்வது பெரும்பாலும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களைக் அடிப்படையாகக் கொண்டதாக அமையும். ஒரு தவறு ஏற்பட்டாலும் கூட அதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு பொறுப்பு இருக்கும்.  இது இலங்கைக்கு உலகளாவிய ரீதியிலான ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும். இரண்டாவதாக சர்வதேச நாணய நிதியத்தின் கீழே இருக்கின்ற ஒரு நாடு என்ற அங்கீகாரமே சர்வதேச கடன் சந்தையிலே சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் மத்தியிலே   இலங்கை மீதான நம்பகத்தன்மை  உறுதிப்படுத்தும்.  சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில் இலங்கை இருக்கின்றது என்பதானலேயே  முதலீட்டாளர்கள்  இலங்கையை நாடுவார்கள்.  அத்துடன் இலங்கைக்கு கடன் வழங்குபவர்கள் கூட தாராளமாக கடன் வழங்க முன்வருவார்கள்.    

கேள்வி ; டொலர் நெருக்கடி ஏற்பட்டு அதில் சர்வதேச நாணய நிதியம் தலையிட்டு மீட்சி கண்ட நாடு ஒன்றை கூறுங்களேன்?

பதில் ; ஒரு உதாரணமாக நாங்கள்  ஆர்ஜென்டினாவை  எடுக்கலாம். ஆர்ஜென்டினா நாடு 2000 ஆம் ஆண்டளவில் மிகப் பெரியதொரு கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அதன்பின் அந்நாட்டின் நாணயமான  பேசோ முழுமையாக தனது பெறுமதியை இழந்தது.  பணத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். பணவீக்கம் அதிகரித்தது. வெளிநாட்டு நாணய பெறுமதி தேய்வடைந்து சென்றது. முழுமையாக பேசோ தனது பெறுமதியை இழந்தது. இதனையடுத்து அந்நாடு  சிறிது காலத்திற்கு அந்த பேசோ நாணயத்தை நிறுத்தி வைத்துவிட்டு அமெரிக்க டொலரை பாவித்தது. இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை காரணமாக அமைந்ததுடன் அந்தநாடு மீண்டது.  அதுமட்டுமன்றி 1980 களில்   சர்வதேச கடன் நெருக்கடி ஏற்பட்டபோது பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் உதவி செய்து மீட்சி அடைய நடவடிக்கை எடுத்தது.   1997 ஆண்டு கிழக்காசிய நிதி நெருக்கடியின்போது கூட சர்வதேச நாணய நிதியம் தாய்லாந்து இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு உதவி செய்தது.  

கேள்வி ; சர்வதேச நாணய நிதியத்தை நிராகரித்த நாடு ? 

பதில் ; மலேசியா மட்டும் சர்வதேச நாணய நிதியத்தை நிராகரித்தது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர்   மகாதீர் மொஹம்மட்  மட்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நிராகரித்தார். அதனை நிராகரித்து தனது கொள்கையை பயன்படுத்தி அந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியமைத்தார்.

கேள்வி ; இதற்கு முன்னர் இலங்கையில் இவ்வாறு பற்றாக்குறை நெருக்கடி ஏற்பட்டதால் அப்போது அது எவ்வாறு கையாளப்பட்டது 

பதில் ; ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் 1970 களில் இவ்வாறானதொரு டொலர்  நெருக்கடிநிலை இலங்கையில் ஏற்பட்டது. அப்போது தீவிரமான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.    அப்போதைய டொலர்  நெருக்கடிக்கு  முக்கியமான மூன்று காரணங்கள் இருந்தன.   அக்காலத்தில் ஏற்பட்ட இளைஞர் கிளர்ச்சி பிரச்சினைகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.   எண்ணெய் விலை அதிகரித்தது.   அதனால்  இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகளும் அதிகரித்ததுடன் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன.  அதுமட்டுமன்றி அப்போது நாட்டில் நான்கு வருட காலமாக தொடர்ச்சியாக மழை பெய்யவில்லை. இந்த மூன்று காரணிகளும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை மோசமான நெருக்கடிக்கு தள்ளிச் சென்றன.  தேயிலை ரப்பர் தெங்கு மூலம் பெறப்பட்ட ஏற்றுமதி வருமானம் இலங்கையின் இறக்குமதி செலவை ஈடுசெய்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை.   கல்வி நடவடிக்கைகளுக்காககூட டொலர்களை பெற்றுக் கொள்வது கடினமாக இருந்தது. அந்தவகையில் 1970 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  இந்த நெருக்கடி காணப்பட்டது.

கேள்வி ; அது எவ்வாறு தீர்க்கப்பட்டது?

பதில் ; இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக இருந்தன. எனினும்  1974, 75 மற்றும் 76 ஆம் ஆண்டுகளில் நிலைமைகள் மீட்சியடைய தொடங்கின.  இலங்கையிலிருந்து ஏற்றுமதிகள் அதிகரித்தன. மழையும் பெய்ய தொடங்கியது. சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலைகள் குறைவடைந்தன. இதுபோன்ற காரணங்களினால் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு ஏற்பட்டது.  இறக்குமதிகள்  கட்டுப்படுத்தபட்டிருந்ததால்  1977 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் வர்த்தக நிலுவை அதாவது ஏற்றுமதி-இறக்குமதி மறைபெறுமான இடைவெளி கணிசமாக குறைந்திருந்தது.  அதற்குப் பின்னர் வந்த அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை திறந்து விடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

(முற்றும்)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52