மக்களின் நலனை முன்னிறுத்தி ஆட்சிக்கவிழ்ப்பொன்றை நிகழ்த்தவேண்டிய நிர்பந்தத்தில் நாம் - எதிர்க்கட்சி 

By T Yuwaraj

22 Dec, 2021 | 09:19 PM
image

(நா.தனுஜா)

அடுத்த ஆண்டில் நாட்டுமக்கள் உண்பதற்கு உணவின்றி மந்தபோசனையினால் மிகமோசமான பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை முன்னிறுத்தி ஆட்சிக்கவிழ்ப்பொன்றை நிகழ்த்தவேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள் இருக்கின்றோம். 

நளின் பண்டாரவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு |  Virakesari.lk

அதன்படி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு எமது கட்சி தயாராக இருக்கும் அதேவேளை, இதுகுறித்து அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் புதன்கிழமை (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

2021 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், அதற்கு முன்னதாகவே தற்போதைய அரசாங்கத்தின்மீது மக்கள் கொண்டிருக்கக்கூடிய மிகச்சொற்ப நம்பிக்கையும் இல்லாமல்போய்விடும்.

ஏனெனில் பாராளுமன்றத்தில் அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே கடந்திருக்கின்ற போதிலும், வரவு, செலவுத்திட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் தற்போது பொய்யாக்கப்பட்டிருக்கின்றன. 

ஆகவே இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அரசாங்கத்தை இயங்குவதற்கு அனுமதிப்பது என்பது மாத்திரமே இப்போது எம்மத்தியிலுள்ள ஒரேயொரு கேள்வியாகும்.

ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் இன்னமும் முடிவடையவில்லை என்று எம்மால் பொறுத்திருக்கமுடியாது. 

ஏனெனில் இன்றளவிலே அனைத்துப்பொருட்களினதும் விலையேற்றம் காரணமாக வாழ்க்கைச்செலவு வெகுவாக உயர்வடைந்துள்ளது.

அதற்கு ஈடுகொடுக்கமுடியாமல் மக்கள் திணறிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முன்னர் ஆட்சிபீடத்திலிருந்த எந்தவொரு அரசாங்கமும் ராஜபக்ஷ அரசாங்கத்தைப்போன்று குறுகிய காலத்திற்குள் நாட்டை மிகமோசமான நெருக்கடிக்குள் தள்ளவில்லை.

எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமின்றி இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாக மிகக்குறுகிய காலத்திற்குள் நாட்டின் உணவுற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அடுத்த ஆண்டு அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலையில் நாடு இருக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் மக்கள் உண்பதற்கு அரசாங்கம் எதனை வழங்கப்போகின்றது? நாட்டுமக்கள் உண்பதற்கு உணவின்றி மந்தபோசனையினால் மிகமோசமான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் ஆண்டாகவே 2022 அமையும். 

தற்போதுவரை இந்த நெருக்கடிகளுக்கான தீர்வுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படாத நிலையில், மக்களின் நலனை முன்னிறுத்தி ஆட்சிக்கவிழ்ப்பொன்றை நிகழ்த்தவேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

உரத்தட்டுப்பாட்டின் காரணமாக விவசாயப்பயிர்ச்செய்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கம் உணவுற்பத்தியில் மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய பல்வேறு துறைகளில் நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. 

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 25 ரூபாவிற்குக் கொள்வனவு செய்த மரக்கறிகளின் விலைகள் இப்போது 200 ரூபாவை விடவும் அதிகரித்திருக்கின்றன. இவ்வனைத்து நெருக்கடிகளுக்கும் பசில் ராஜபக்ஷவின் செயற்திறனற்ற பொருளாதார நிர்வாகமே பிரதான காரணமாகும். வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துவிட்டு 'ஏழு மூளைகளைக் கொண்டவர்' என்று வர்ணிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ அவரது தாய்நாட்டிற்குச் சென்றுவிட்டார். 

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும்போது நிதியமைச்சர் பொறுப்பு ஜீ.எல்.பீரிஸ் வசமிருக்கின்றது. இத்தகைய நெருக்கடி ஏற்படுவதற்கு ஏதுவான அனைத்து விடயங்களையும் ஆரம்பத்திலிருந்து செய்துவிட்டு, நெருக்கடி ஏற்படும்போது சம்பந்தப்பட்டவர் நாட்டில் இல்லை. இவ்வாறான விடயங்களில் மாத்திரமே அவரது மூளை சிறப்பாக செயற்படுகின்றது.

ஆளுந்தரப்பில் அங்கம் வகிப்பவர்களில் பொருளாதாரம் குறித்து எதனையும் அறியாதவர்களிடம் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வாகிப்பதற்கான பொறுப்பு கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எமது தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நோக்குகையில் பொருளியல் நிபுணர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரும் பாராளுமன்றத்திற்கு வெளியே மேலும் பல பொருளாதார வல்லுனர்களுமே பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அதில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் கையாள்வதற்குமென நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். ஆனால் கடன்வழங்கலுக்கான அவற்றின் நிபந்தனைகளைத் தம்மால் பூர்த்திசெய்யமுடியாது என்பதை நன்கறிந்திருப்பதன் காரணமாகவே அரசாங்கம் கடனுதவிகளுக்காக சீனாவை நாடுகின்றது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'கழிவு உரத்திற்கான' கொடுப்பனவு உள்ளடங்கலாக ஏனைய நிலுவைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காகவே இப்போது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி விவசாயம் உள்ளடங்கலாக தற்போது வீழ்ச்சிகண்டிருக்கும் அனைத்துத் துறைகளையும் மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான செயற்திட்டங்கள் எம்மிடம் உள்ளன. விடுமுறைக்காலத்தில் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் சஜித் பிரேமதாஸ வெளிநாட்டிற்குச் சென்றிருப்பதாக எப்போதேனும் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அவர் அவ்வப்போது மன அமைதிக்காக யால, வில்பத்து போன்ற இடங்களுக்குச் செல்வதுண்டு. அதனால் நாட்டிற்கு டொலர் நெருக்கடி ஏற்படுகின்றதா? எனவே இவையனைத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து தற்போதைய அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.

மேலும் கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் ஒப்பந்தமானது, குறித்த மின்னுபத்தி நிலையத்துடன் தொடர்புடைய விவகாரங்களில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மின்னுற்பத்திக் கட்டமைப்புக்களிலும் தேசிய பாதுகாப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே அவ்வொப்பந்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனூடாக நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

கேள்வி - உங்களது தரப்புடன் இருந்த அஸாத் சாலி, கீர்த்தி தென்னகோன் போன்றவர்கள் அண்மையில் சிறிகொத்தாவிற்குச் சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததுடன் ஆளுந்தரப்பைப்போன்று எதிர்த்தரப்பிற்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இதுகுறித்து உங்களது கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில் - ஜனாதிபதியாகும் விருப்பம் உடையவர்கள் எதிர்க்கட்சியின் இருக்கக்கூடும். அத்தகைய விருப்பத்துடன் சிலர் இருக்கின்றார்கள் என்பதை நாமறிவோம். அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் ஜனாதிபதியாவதற்கான விருப்பத்திற்கும் அப்பால், அதற்கான தகுதி இருக்கவேண்டும். ஆகவே எதிர்வரக்கூடிய தேர்தல்களில் அவர்கள் அனைவரும் தம்மைத்தாமே சுயமதிப்பீடு செய்து, ஜனாதிபதியாவதற்கான தகுதியுடையவரின் தரப்புடன் ஒன்றிணைவார்கள். அதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக இயங்கக்கூடிய ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட எதிர்த்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right