(எம்.மனோசித்ரா)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாலிம்பட பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க பிரதேசத்தில் 126.8 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் மத்தளை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்று கவனயீனமான முறையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதே திசையில் வந்த எரிபொருள் லொறி அதனுடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது லொறி சாரதியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, எரிபொருள் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் உதவியாளர் 72 வயதுடைய கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, எரிபொருள் லொறி சாரதி 61 வயதுடைய கோனவல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

மாலிம்பட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.