நியூசிலாந்தின் அரசியல் முறைமையில் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்படுகின்றதென பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தை சென்றடைந்தார்.

அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அரசதலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு திருத்தம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியலமைப்பு மாற்றத்திற்குள் நியூசிலந்தின் அரசியல் முறைமைகளை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். 

நியூசிலாந்தின் அரசியல் முறைமையில் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்படுகின்றன.

குறிப்பாக நியூசிலாந்தின் கலப்பு உறுப்பினர் விகிதாசார தேர்தல் முறை  தொடர்பில் உள்நாட்டு பாராளுமன்றத்தில் கூடிய கவனம் செலுத்தப்படும்.

அதேபோன்று இரு நாட்டு சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் பால்மா இறக்குமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அங்குள்ள மிருகக் காட்சிசாலைக்கு விஜயம் செய்த பிரதமர்,  கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு பரிசளிக்கப்பட்ட  அஞ்சலி என்ற யானைக்குட்டியையும் பிரதமர் பார்வையிட்டார்.