இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்திலும் இலங்கையிலும் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படுமென நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நியூஸிலாந்தின் ஆக்லாந்திலுள்ள அரச மாளிகையில் இன்று அவருக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு நடைபெற்றதுடன் அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.

பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே நியூசிலாந்து பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தலைவர் ஒருவர் நியூசிலாந்துக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இது இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதுடன் இரு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் மீள் கட்டியெழுப்பக்கூடியதாக அமைந்துள்ளது.

நீண்ட கால உள்நாட்டுப்போரின் பின்னர் இலங்கை திடகாத்திரமான மீள் கட்டுமானத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றது. 

இந்நிலையில் நியூசிலாந்து அரசாங்கம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரசார் துறைகளில் கூடிய உறவை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்கும்.

இதேவேளை, இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வெலிங்டனிலும் கொழும்பிலும் இரு நாட்டு உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவுவதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுநலவாய அங்கத்துவ நாடுகள் என்ற வகையில், வர்த்தகவரி சலுகை, இரு நாட்டு சுற்றுலாத்துறைக்கான ஊக்குவிப்பு மற்றும் உயர்கல்விக்கு மாணவர்களை உள்ளீர்ப்பது குறித்து நியூலாந்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

உள்ளக தேர்தல் பொறிமுறை மற்றும் அரச நிர்வாகங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக இலங்கை, அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் செயற்படும் இத் தருணத்தில், இரு நாடுகளுக்கும் பொது அம்சமாக கருதக்கூடிய பல்லின சமத்தவத்தை பேணுவதற்காக  நியூலாந்தின் கலப்பு உறுப்பினர் விகிதாசார தேர்தல் முறை தொடர்பிலும் இலங்கைப் பிரதமருக்கு தெளிவுபடுத்தினேன்.