மகாவலி ஆற்றில் குதித்த காதல் ஜோடியில், காதலன் நீந்தி தப்பியதுடன், காதலி நான்கு தினங்களுக்கு பின் எட்டு கிலோ மீட்டருக்கு தூரத்தில் கரை ஒதுங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டார்.

மகியங்கனைப் பகுதியின் ரிதிமாலியத்தை என்ற இடத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியும், 22 வயதுடைய காதலனும் நீண்டகாலமாகவே காதலித்து வந்தனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன் இவ்விருவரும் மகியங்கனை பாலத்திலிருந்து கதைத்துக்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் காதலி பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்துள்ளார். அத்துடன் காதலனும் ஆற்றில் குதித்தார். காதலன் ஒருவாறு நீந்தி தப்பிய போதிலும், காதலி காணாமல் போயிருந்தார்.

நான்கு தினங்களுக்குப் பின்னர், மாடு மேய்க்கச் சென்ற நபரொருவர் கரை ஒதுங்கியிருக்கும் சடலம் குறித்து, மகியங்கனைப் பொலிசாருக்கு அறிவித்தார். பொலிசார் அவ்விடத்திற்கு விரைந்து, சடலத்தை மீட்டதுடன், சடலமும் அடையாளமும் காணப்பட்டது. 

சடலத்திற்குரிய யுவதியின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கைப்பையில் இருந்த தேசிய அடையாள அட்டைகள் இரண்டின் ஊடாக, யுவதி நான்கு தினங்களுக்கு முன் மகாவலி ஆற்றில் குதித்து காணாமல் போனவரின் சடலமென்று அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த யுவதியுடன் ஆற்றில் குதித்த யுவதியின் காதலன் நீந்தி தப்பியபோதிலும், அந்நபர் மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நபரின் அடையாள அட்டையும், அவரின் காதலியின் அடையாள அட்டையுமே, சடலத்தில் மாட்டப்பட்டிருந்த கைப்பையில் கிடந்த இரு அடையாள அட்டைகளாகுமென்று பொலிசார் தெரிவித்தனர்.

இவ் அடையாள அட்டைகளுக்கமைய இருவருமே, ரிதிமாலியத்தையைச் சேர்ந்தவர்களாவர். இவ்விருவரது பெற்றோர் பொலிசார் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலங்களை பொலிசார் பதிவு செய்தனர். 

இவ் வாக்குமூலத்தினடிப்படையில் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்த காதல் ஜோடிகள் என்று புலனாகியுள்ளது. 

இவ்விருவரும் ஆற்றில் குதிக்க காரணம் தெரியாத மர்மமாகவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மகியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மீட்கப்பட்ட யுவதியின் சடலம் யுவதியின் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.