(இராஜதுரை ஹஷான்)

அமைச்சரவையினை மறுசீரமைக்காமல் அரச நிர்வாக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமாகும் என பிரதமர் மஹிந்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளி கட்சி தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.  

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்துவதால் மாத்திரம் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என பிரதமருக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

ஜனவரி 18 ஆம் திகதி பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுத்தப்படும் போது அரசாங்கத்தின் கொள்கையினை செயற்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்படுவதுடன், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடையும் என பிரதமருக்கு முக்கிய தரப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

நிதி மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்களை தவிர்த்து ஏனைய அமைச்சுக்களை மறுசீரமைப்பதனால் மாத்திரம் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.சிறந்த கொள்கை வகுப்பதன் ஊடாக மாத்திரம் சவால்களை வெற்றிக் கொள்ள முடியும் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

அமைச்சரவையினை மறுசீரமைக்காமல் அரச நிர்வாகக்கட்டமைப்பில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அமைச்சின் செயலாளர்கள்,அரச திணைக்களங்களின் தலைவர் மற்றும் அரச நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என பிரதமர் அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அரசாங்கத்தின் தீர்மானங்களை  அமைச்சர்களும்,அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொது இடங்களில் விமர்சிப்பது தவறான செயற்பாடாகும்.

அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்தும்  சகல சந்தர்ப்பங்களிலும் சரியானதாக அமைய முடியாது.காணப்படும் குறைப்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்.

ஆகவே அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களிடம் குறிப்பிட்டதாக பங்காளி கட்சி தலைவர் குறிப்பிட்டார்.