வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் மாயமாகியுள்ளதுடன் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவர் இன்று (20) குதித்துள்ளார்.

குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததுடன், கிணத்தில் குளிக்க செல்வதாக அருகில் இருந்த இளைஞர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் தனது ஆடைகளை கழற்றி கிணற்றின் அருகில் வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் சென்றுபார்த்தபோது, அந்த சிறுவனை காணவில்லை.

இதனையடுத்து ஊர்மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கிராமத்தவரகள் கிணற்றினுள் இறங்கி தேடுதல் நடத்திய நிலையில் நீண்டநேரமாகியும் குறித்த சிறுவனை மீட்கமுடியவில்லை.

இதனையடுத்து கடற்படையினரின் உதவி கோரப்பட்டு தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே காணாமல் போயுள்ளார்.