(நா.தனுஜா)
கடன் மீளச்செலுத்துகை ஆற்றலை அடிப்படையாகக்கொண்டு ஃபிட்ச் ரேட்டிங் கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை 'சிசி' நிலைக்குத் தரமிறக்கம் செய்யப்பட்டிருப்பதானது, கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில் நாட்டில் இடம்பெற்றுவரும் நேர்மறையான முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்கு அந்நிறுவனம் தவறியிருப்பதையே காண்பிக்கின்றது என்று சுட்டிக்காட்டி இலங்கை மத்திய வங்கி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் அந்நாடுகளிடமிருந்தும் ஏனைய பிராந்திய நாடுகளிடமிருந்தும் கடன்கள் மற்றும் ஏனைய வடிவிலான உதவிகள் கிடைக்கப்பெறும் சாத்தியங்கள் காணப்பட்ட நிலையில், ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அறிவிப்பினால் மேற்படி நாடுகள் அவற்றின் தீர்மானத்தை மாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் மத்திய வங்கி கவலை வெளியிட்டிருக்கின்றது.
அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் 'ஃபிட்ச் ரேட்டிங்' என்ற கடன் தரப்படுத்தல் முகவர் நிறுவனமானது சர்வதேச ரீதியில் இயங்கும் மூன்று முக்கிய கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றாகும்.
இத்தரப்படுத்தல் நிறுவனத்தினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் கடன் மீளச்செலுத்துகை ஆற்றலில் 'சிசிசி' நிலையிலிருந்த இலங்கை தற்போது 'கடன் மீளச்செலுத்துகை ஆற்றல் மிகவும் உயர் அச்சுறுத்தல் நிலையில்' காணப்படுவதைக் குறிக்கும் வகையில் 'சிசி' என்ற நிலைக்குத் தரமிறக்கப்பட்டுள்ளது.
இத்தரமிறக்கல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஃபிட்ச் ரேட்டிங் கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் கடன் மீளச்செலுத்துகை ஆற்றலை அடிப்படையாகக்கொண்டு இலங்கை தரமிறக்கம் செய்யப்பட்டிருப்பதானது, கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் நேர்மறையான மாற்றங்களை ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் அங்கீகரிப்பதற்குத் தவறியிருக்கின்றமையையே காண்பிக்கின்றது.
இந்த நடவடிக்கை, 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இலங்கையைத் தரமிறக்கும் வகையில் மூடியின் முதலீட்டாளர் சேவையினால் வெளியிடப்பட்ட அறிவிப்பை ஒத்ததாக அமைந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச்செய்யும் அனைத்துத் துறைகளிலும் இடம்பெறும் முன்னேற்றகரமான நகர்வுகள் மற்றும் அந்நியச்செலாவணி தொடர்பில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்திற்கு இலங்கை அதிகாரிகளால் தொடர்ச்சியாக தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டுவந்த நிலையில், சர்வதேச ரீதியில் அங்கீகாரம்பெற்ற ஓர் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைத் தரமிறக்கம் செய்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் நாடு முடக்கப்பட்டபோதிலும், அதற்கு மத்தியிலும் இலங்கை 'நியூ நோர்மல்' நிலைக்கு இசைவாக்கம் அடைவதைப் புலப்படுத்தும் வகையில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான மாற்றங்கள் தென்பட்டன.
அதுமாத்திரமன்றி இவ்வாண்டின் ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமான விரிவடைந்ததுடன் அது இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்தை விடவும் உயர்வாகப் பதிவாவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதை மீள உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
தொற்றுப்பரவலின் பின்னரான காலப்பகுதியில் வலுவான பொருளாதார மீட்சியை நோக்கிப் பயணிப்பதற்கான குறிகாட்டிகளும் தென்பட்டன. குறிப்பாக நவம்பர் மாதத்திற்கான உற்பத்தி கொள்வனவு முகாமையாளர்கள் சுட்டெண் 61.9 ஆகப் பதிவானதுடன் இதுவரையான காலத்தில் நவம்பர் மாதத்தில் உயர்வாகப் பதிவான சுட்டெண் இதுவேயாகும்.
மேலும் இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து பெருமளவான பொதுநிதி கிடைப்பனவுடன் கொழும்புப் பங்குப்பரிவர்த்தனை நிலையமும் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது.
இவ்வாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரையான 10 மாதகாலத்தில் தனியார் துறையினருக்கான கடன்கள் 685 பில்லியன் ரூபாவாக விரிவாக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் தனியார் துறையினருக்கான கடன்கள் 260 பில்லியன் ரூபாவாகவே காணப்பட்டன.
உயர் ஏற்றுமதி வருவாயின் உதவியுடன் நாட்டின் வர்த்தகப்பற்றாக்குறை கடந்த மேமாதத்திலிருந்து மாதாந்தம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதத்தில் வர்த்தக ஏற்றுமதிகள் மூலமான வருவாய் மிக உயர்வாகப் பதிவானது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் நாணயமாற்றுவீதம் நிலையான மட்டத்தில் பேணப்படுவதுடன் அண்மைய சில வாரங்களில் அந்நியச்செலாவணி வருமானமும் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்துள்ளது. அதுமாத்திரமன்றி மாதாந்த அடிப்படையில் நோக்குமிடத்து நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையிலும் சீரான அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளடங்கலாக வெளிநாடுகளில் இலங்கைத் தொழிலாளர்களுக்கான கேள்வி உயர்வாகக் காணப்படுவதாலும் ஈர்க்கத்தக்க விசேட சலுகைகளுடன் முறைசார் வழிகளில் பணம் அனுப்பப்படுவதை ஊக்குவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாலும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமான வருவாய் சிறந்த மட்டத்தில் காணப்படுகின்றது.
அதேவேளை வெளிநாட்டு நடைமுறைக்கணக்கை பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவாறான மட்டத்தில் பேணுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் கொழும்புத்துறைமுக நகரம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களில் இடம்பெறும் நேரடி முதலீடுகளின் ஊடாக நிதிக்கணக்கில் உள்ள திரவ மூலதனத்தின் அளவை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளும் தேசிய ரீதியிலான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமும் அண்மைய மற்றும் நடுத்தரகால அடிப்படையிலான நாட்டின் பொருளாதார இயலுமையைப் புரிந்துகொள்வதற்குத் துணைபுரியும்.
மேலும் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமானது அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி மறுசீரமைப்புக்களைக் கருத்திற்கொள்வதற்குத் தவறியிருக்கின்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரி அறவீட்டு முறைமைகள், வரி அறவீட்டு நிர்வாகக்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பொருளாதார மீட்சி ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டில் அரச வருமானம் குறிப்பிடத்தக்களவால் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசசேவையில் பணியாற்றுவோரின் ஓய்வுபெறும் வயதெல்லை உயர்த்தப்பட்டமை, அரசுக்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் முயற்சியாண்மைகள் சிறப்பாக இயங்குவதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தல் ஆகியவை அண்மைய மறுசீரமைப்புக்களில் குறிப்பிட்டுக்கூறத்தக்கவையாகும். நிதி மறுசீரமைப்பு தொடர்பில் உள்ளக சந்தைகள் சாதகமான துலங்கலை வெளிப்படுத்தியிருப்பதுடன் வட்டிவீதங்களும் நிலையான மட்டத்தில் பேணப்படுகின்றன.
ஏற்கனவே பெறப்பட்ட கடன்களை மீளச்செலுத்துவதற்கான அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் அரசாங்கமும் மத்திய வங்கியும் அயல்நாடுகளிடமும் நட்புநாடுகளிடமும் உதவிகளைப் பெற்றிருக்கின்றது. அதன்படி இவ்வருட இறுதியில் நாட்டின் மொத்த இருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் என்று மத்திய வங்கி நம்புகின்றது. இருப்பினும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் கருத்திற்கொள்ளவில்லை.
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் அந்நாடுகளிடமிருந்தும் ஏனைய பிராந்திய நாடுகளிடமிருந்தும் கடன்கள் மற்றும் ஏனைய வடிவிலான உதவிகள் கிடைக்கப்பெறும் சாத்தியங்கள் காணப்பட்ட நிலையில், ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அறிவிப்பினால் மேற்படி நாடுகள் அவற்றின் தீர்மானத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்.
முதலாவது சோதனைக்குரிய நாளான எதிர்வரும் 31 ஆம் திகதிவைர கூட காத்திருக்காமல் இலங்கையைத் தரமிறக்குவதற்கு ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது, எதிர்வரக்கூடிய விளைவுகளை முன்னெதிர்வுகூறக்கூடிய தன்மை இல்லை என்பதையே காண்பிக்கின்றது.
மேலும் மீளச்செலுத்தவேண்டிய கடன்களை உரியகாலத்தில் செலுத்துவதாக இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதியையும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இருவருடகாலமாக நாடு மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற போதிலும், இதுவரையில் கடன்களை மீளச்செலுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டியது அவசியமாகும். ஆகவே ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் இந்தத் 'திருப்தியளிக்காத' தரப்படுத்ததைக் கருத்திற்கொள்ளவேண்டாம் என்றும் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வருமாறும் சர்வதேச முதலீட்டாளர்கள் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துப் பங்காளிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM