(நா.தனுஜா)
மிகமோசமான குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுகின்றதொரு சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முற்பட்டவர்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
நீதியை நிலைநாட்டுமாறு சிறுபான்மையினத்தவரிடமிருந்து எழுகின்ற குரல்களை அடக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் 10) முன்னிட்டு சித்திரவதைகளுக்கு எதிரான ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (17) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை. ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களை முகாமை செய்யும் சர்வதேச அமைப்பான தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை 'ஏ' நிலையிலிருந்து 'பி' நிலைக்குத் தரமிறக்குவதற்கான பரிந்துரையை முன்வைத்திருக்கின்றது. இது கடந்த 2019 ஜனாதிபதித்தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் நாட்டின் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவையே காண்பிக்கின்றது.
குறிப்பாக பல்வேறு குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுகின்றதொரு சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முற்பட்டவர்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
நீதியை நிலைநாட்டுமாறு சிறுபான்மையினத்தவரிடமிருந்து எழுகின்ற குரல்களை அடக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவருகின்றது. போதிய ஆதாரங்கள் இல்லாதபோதிலும், எமது சொந்தப் பிரஜைகளை வலுகட்டாயமாகத் தடுத்துவைப்பதற்கான ஓர் ஆயுதமாக அச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
பயங்கரவாத்தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து அச்சட்டத்தின்கீழ் நபர்கள் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவானதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரமன்றி எமது அரசியலமைப்பிற்கு அமைவானதாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியமாகும்.
அதன்படி தடுத்துவைக்கக்கூடிய உயர்ந்தபட்ச கால அளவை 18 மாதங்களிலிருந்து 30 நாட்களாகக் குறைத்தல், தடுப்புக்காவல் தொடர்பில் நீதிபதி தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய வகையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல், சந்தேகநபரால் பொலிஸ் அதிகாரியொருவருக்கு வழங்கப்படும் வாக்குமூலம் நீதமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாதிருத்தல் ஆகியவை அத்திருத்தங்களில் உள்வாங்கப்படவேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான இடைவெளியை விரிவுபடுத்துவதற்கு இருக்கக்கூடிய சிறியதோர் வாய்ப்பு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையாகும்.
நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் வசமுள்ள வெளிநாட்டுச்சந்தைகளை அணுகக்கூடிய வாய்ப்புக்களை அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு முதன்முதலாக 2006 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதுடன் கடந்த 2011 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவ்வரிச்சலுகை நிறுத்தப்பட்டது.
இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததுடன் ஜனநாயக ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதாக வழங்கிய வாக்குறுதிகளையடுத்து மீண்டும் 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2.3 பில்லியன் யூரோவிற்கும் அதிக பெறுமதியுடைய, இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் மாற்றமடைந்தது.
கொள்கைகள் கற்கை நிலையத்தின் மதிப்பீட்டின்படி ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படுமானால் ஆடை, புகையிலை, கடலுணவு, இறப்பர் உள்ளடங்கலாக ஏற்றுமதிகளில் சுமார் 627 மில்லியன் டொலர் வீழ்ச்சியேற்படும். ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM