இலங்கையும் சீனாவும் வரலாற்று ரீதியாக சிறந்த நட்புறவைப் பேணிவருகிறன்றன. அந்த நட்புறவை வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

67 ஆவது சீன தேசிய தினம் மற்றும் சீன இலங்கை நட்புறவு சங்கத்திற்கு 35 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே நிலவும் நட்பானது அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத்துறைகளிலும் சர்வதேச மட்டத்திலும் இன்று மிகவும் பலமாகவும் உயர்ந்த நிலையிலும் உள்ளது. 

சீனா எல்லா சந்தர்ப்பங்களிலும் எமக்காக குரல்கொடுத்துவரும் ஒரு நட்பு நாடு. கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட சகல துறைகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் சீனா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி, தான் ஜனாதிபதியாக சீனாவுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயத்தின்போது சீன அரசாங்கத்திடமிருந்தும் மக்களிடமிருந்தும் தமக்குக் கிடைக்கப்பெற்ற வரவேற்பை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அவ்விஜயத்தின்போது சீன ஜனாதிபதியிடம் தான் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான விசேட சிறுநீரக வைத்தியசாலை இலங்கைக்கு சீனாவிடமிருந்து அண்மைக்காலத்தில் கிடைக்கப்பெற்ற நட்புப் பரிசாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

67 ஆவது சீன தேசிய தினம் தொடர்பாக பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். 

சீன - இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் அமரதாச குணவர்தன ஜனாதிபதிக்கு நூலொன்றையும் கையளித்தார்.

இலங்கையின் சீனத்தூதுவர் யீ சியெங் லியெங் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.