(நா.தனுஜா)

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்து ஒருமாதம் கடந்துள்ள போதிலும், இன்னமும் இதுபற்றிய முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை.

 ஆகவே நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதியொருவரோ அல்லது சிலரோ இதன் பின்னணியில் இருக்கின்றார்கள். அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே எரிவாயு உற்பத்தியின்போது பின்பற்றப்படவேண்டிய தரநியமம் மீறப்பட்டிருக்கின்றது. 

இப் பிரச்சினையை அரசாங்கம் வேண்டுமென்றே தோற்றுவித்திருக்கின்றது என்பது இவற்றன் மூலம் தெளிவாகியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் நாட்டின் அனைத்துத்துறைகளும் மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். 

குறிப்பாக அரசாங்கம் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் 'எரிவாயு சிலிண்டர் வெடிகுண்டுகளை' மக்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.

தற்போதுவரை நாடளாவிய ரீதியில் 400 இற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன் பெண்ணொருவர் உயிரிழந்திருக்கின்ற போதிலும் இன்னமும் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு உரியவாறான தீர்வை வழங்கவில்லை.

இவ்விவகாரத்தில் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யும்போது பின்பற்றப்படவேண்டிய தரநியமங்கள் மீறப்பட்டிருப்பது நிரூபணமாகியிருக்கும் நிலையில், இது தெரியாமல் இடம்பெற்ற தவறல்ல என்பதை தெளிவாகியுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தினால், குறைந்தபட்சம் மக்களுக்கு பாதுகாப்பான எரிவாயு சிலிண்டர்களைக்கூட விநியோகிக்க முடியவில்லை.  இதனைக்கூடச்செய்யமுடியாத அரசாங்கம் எதற்குப் பதவியில் இருக்கவேண்டும்? இவ்விவகாரம் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி நாம் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடளித்து ஒருமாதம் கடந்துள்ள போதிலும், இன்னமும் இதுபற்றிய விசாரணைகள் இடம்பெறவில்லை.

ஆகவே நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதியொருவரோ அல்லது சிலரோ இதன் பின்னணியில் இருக்கின்றார்கள். அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே சிலிண்டர் நிறுவனம் செயற்பட்டுள்ளது. ஆகவே இப்பிரச்சினை அரசாங்கத்தினால் வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்டதாகும்.

அடுத்ததாக இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறுவதற்காகப் பல்வேறு பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக குருணாகல் பிரதேசத்தில் வைத்தியர் ஷாபியினால் பல பெண்களுக்கு அவர்கள் அறியாதவண்ணம் கருத்தடை செய்யப்பட்டதாகக்கூறி அதனை அடிப்படையாகக்கொண்டு பிரசாரமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தற்போதைய இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அப்போது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் அவர்மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கமுடியாத நிலையில், அவரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்வதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருக்கின்றது.

ஆகவே தேர்தலை இலக்காகக்கொண்டு இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக உண்மைக்குப் புறம்பான ஒரு விடயம் பிரசாரப்பொருளாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு மக்களை ஏமாற்றி 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம், தற்போதும் அதனையே தொடர்ந்து செய்துவருகின்றது.

ஆட்சிபீடமேறியதிலிருந்து தமக்கு நெருக்கமானவர்களை வழக்குகளிலிருந்து விடுவித்துக்கொண்ட ராஜபக்ஷ அரசாங்கம், மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கோ அல்லது அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை.

 அரசியலமைப்பிற்கு விரோதமாக '52 நாட்கள் அரசாங்கம்' ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதை இலக்காகக்கொண்டு இனங்களுக்கிடையில் பிளவுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

அத்தகைய செயற்பாடுகளால் சமூகத்தின் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதுடன் அவற்றின் விளைவுகளையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

 மேலும் பாராளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், வெளியே வந்தவுடன் தாமும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். குறிப்பாக கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை தாம் ஆதரிப்பதாக ஆளுந்தரப்பின் மூன்று அமைச்சர்கள் சத்தியக்கடதாசி வழங்கியதன் விளைவாக அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு மீறப்பட்டிருக்கின்றது. இத்தகைய செயற்பாடுகள் மூலம் இவர்கள் நாட்டுமக்களை ஏமாற்றுகின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.