இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதியில் விளையாடுவதற்கு யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டாவது அணியாக இளவாலை புனித ஹென்றியரசர் அணி தகுதிபெற்றுள்ளது.

சிட்டி லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு எதிரான மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 ; 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் புனித ஹென்றியரசர் அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினர் 9ஆவது நிமிடத்தில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் மூலம் முதலாவது கோலைப் போட்டனர்.

எட்டு நிமிடங்கள் கழித்து புனித ஹென்றியரசர் அணியின் இரண்டாவது கோலை அல்ப்ரட் பெனடிக்ட் அனோஜன் புகுத்தினார்.

புனித ஹென்றியரசர் விளையாடிய விதம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும் வண்ணம் இருந்தது. அவ்வணியின் பந்து பரிமாற்றம், வீரர்களிடையே புரிந்துணர்வு, எதிர்த்தாடல், தடுத்தாடல் என்பன சிறப்பாக அமைந்திருந்ததாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் முன்னாள் தேசிய வீரர் சமிந்த ஸ்டெய்வோல் தெரிவித்தார்.

இடைவேளை யின் பின்னர் மாரிஸ் ஸ்டெல்லா அணியினரின் ஆட்டத்திறன் வெளிப்பட ஆரம்பித்தது. எனினும் புனித ஹென்றியரசர் அணியின் பின்களவீரர்களும் கோல்காப்பாளரும் சாதுரியமாக செயற்பட்டு கோல் போடப்படுவதைத் தடுத்த வண்ணம் இருந்தனர்.

குறிப்பாக போட்டியின் 36ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா அணித் தலைவர் அஞ்சன குணவர்தனவின் ப்றீ கிக்கை மிக இலாவகமாக புனித ஹென்றியரசர் கோல்காப்பாளர் உகந்தீஸ்வரன் அமல்ராஜ் தடுத்து நிறுத்தியமை பலத்த பாராட்டுக்குள்ளானது. சற்று நேரத்தின் பின்னர் மற்றொரு எதிரணி வீரருக்கு கிடைத்த மிகவும் இலகுவான கோல் போடும் வாய்ப்பையும் அமல்ராஜ் தனது சாதுரியத்தால் முறியடித்தார்.

மறுபுறத்தில் புனித ஹென்றியரசர் அணியின் அமலதாஸ் மதுசன், ஞானேஸ்வரன் அன்தனிராஜ் ஆகியோரின் கோல் போடும் முயற்சிகள் கைகூடாமல் போயின.