நாட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் - டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை

By T. Saranya

16 Dec, 2021 | 01:48 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இவ்வாண்டில் மாத்திரம் 30 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொவிட் தொற்றுக்கு சமாந்தரமாக டெங்கு அபாயமும் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிலாந்தி செனவிரட்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டில் இதுவரையில் 30,765 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நவம்பர் மாதம் 4,561 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

எனினும் டிசம்பரில் இதுவரையான (நேற்றுவரை) குறுகிய காலத்தில் 3,715 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த வருடங்களை விட அதிகமாகும்.

எனவே காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் தாமதிக்காது வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தற்போது பெரும்பாலான டெங்கு நோயாளர்கள் மிகவும் தாமதித்து வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்வதால் சிக்கல் நிலைமை  ஏற்படுகிறது. 

வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளர்களுக்கு பிரத்தியேகமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே எவ்வித அச்சமும் இன்றி வைத்தியசாலைக்கு வருமாறு அறிவுறுத்துகின்றோம்.

இதுவரை இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 60 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சனத்தொகை அதிகம் என்பதால் இவ்வாறு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது. எனவே சுற்றுசூழலை தூய்மையாகப் பேணி , அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right