'தீர்ப்புகள் விற்கப்படும்' இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Published By: T Yuwaraj

16 Dec, 2021 | 10:36 AM
image

புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தீரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'தீர்ப்புகள் விற்கப்படும்'. இந்தப் படத்தில் 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், ஜோர்ஜ் மரியான், ஸ்ரீ ரஞ்சனி, லிசி அண்டனி, சார்லி, லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆஞ்சி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தந்தை - மகள் இடையேயான உறவை வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த படத்தின் முழு திரைக்கதையை எழுதிவிட்டு, தந்தை கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று கருதி, அவரை சந்தித்து, கதை சொன்னேன். பொறுமையாகவும், தூங்காமலும் கதை கேட்டார். பிறகு முழு திரைக்கதையை தந்து விடுமாறு கேட்க,  நம்பிக்கை இல்லாமல் கொடுத்துவிட்டு வந்தேன். 

பிறகு ஒருநாள் அதிகாலையில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது.  அவர் நடிக்க ஒப்புக்கொண்ட அந்த தருணத்திலிருந்து படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. புதுமுக இயக்குநர் என்றும் பாராமல் எம்முடைய கோரிக்கையை கனிவுடன் ஏற்றுக்கொண்டு முழுமையான ஒத்துழைப்பு அளித்தார் நடிகர் சத்யராஜ். 'கட்டப்பா' வாக இந்த தலைமுறையினருக்கு அறிமுகமாகியிருக்கும் நடிகர் சத்யராஜ் இந்த படத்திற்கு பிறகு மீண்டும் புதிய உயரத்தை தொடுவார். 'தீர்ப்புகள் விற்கப்படும்' தலைப்பு பல தயாரிப்பாளர்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் சலீம், கதைக்கு பொருத்தமானது என கூறியதுடன் துணிச்சலாக தயாரித்தார். 

அதைவிட கூடுதல் துணிச்சலுடன் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பிரபு திலக் இந்த படத்தை வெளியிடுகிறார். பாலியல் குற்றவாளிகளுக்கு பெண் பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் வழங்கவேண்டிய தண்டனையுடன் கூடிய தீர்ப்பு குறித்து இந்தப்படம் விரிவாக பேசி இருப்பதால்  வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

அல்தாரி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி ஆர் சலீம் தயாரித்திருக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டிற்கு முன்னாள் நீதியரசர் சந்துரு, முன்னாள் காவல்துறை உயரதிகாரி திலகவதி, மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலர் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்