(ஆர்.யசி)

உலக வல்லரசுகள் பலமான அரசியல் உடன்படிக்கைகளையும், நிதி உடன்படிக்கைகளையும் வைத்துக்கொண்டு எமது தேசிய வளங்களை மட்டுமல்லாது வலுசக்தி, மூலதன வளங்களையும் கைப்பற்றும் நோக்கத்தில்  எமது பலவீனமான, வீழ்ச்சிகண்டுள்ள இராச்சியத்தை கைப்பற்ற நினைப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை நிலையில், நாட்டில் இறுதி காலாண்டு மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது என்பது தெளிவாக வெளிப்படுகின்றது. தேசிய நிதி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை என்பன பாரிய சூறாவளியாக இலங்கையை தாக்கும். 

இவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு தீர்மானம் மிக்கதாகும். 2022 ஆம் ஆண்டில் 7000 மில்லியன் டொலர் கடன்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. இவற்றில் இருதரப்பு கடன்களாக 550 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடனாக 604 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும், இறக்குமதிக்கான நிதியாக 514 மில்லியன்களை செலுத்த வேண்டும், சர்வதேச பிணைகளுக்காக 1500 மில்லியன் டொலர்களையும் அதற்கான வட்டியாக 1083 மில்லியன் டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளது. 

இலங்கை அபிவிருத்தி பிணைமுறிகளாக 1441 மில்லியன் டொலர்களையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய தொகையாக 1200 டொலர்களையும், பங்களாதேஷிடம் வாங்கிய கைமாற்றல் நிதியாக 200 மில்லியனையும் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 940 மில்லியன் டொலர்களுக்கும்  அதிகமான தொகையை செலுத்தியாக வேண்டும். ஆனால் எமது கையிருப்பில் வெறுமனே 140 மில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ளன. 

ஆகவே வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முற்றுமுழுதாக வீழ்ச்சி காணும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஜனாதிபதி ஆட்சியில் இருப்பார், ஆனால் இன்னும் ஒரு மாதம் மட்டுமே தான் ஆட்சியில் இருப்பேன் என்ற நிலைப்பாட்டில் தீர்மானம் எடுக்கின்றார். தற்காலிக தீர்வுகளை பெற்று நெருக்கடிகளை சமாளிக்க முயற்சிக்கின்றார். 

அதேபோல் இந்த நெருக்கடி நிலைமைகளை பி.பி.ஜெயசுந்தரவின் மீது சுமத்தி அவரை நீக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அவரும், அஜித் நிவாட் கப்ராலும் இந்த குற்றத்தில் பங்குதாரர்கள்தான், ஆனால் பி.பி.ஜெயசுந்தரவை பதவி நீக்கிவிடுவதால் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துவிடாது. இதற்கு பிரதான காரணம் ராஜபக்ஷவினரேயாகும்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா, இல்லையா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துகொண்டுள்ளது. ஆனால் இப்போது செல்ல முடியாது, காலம் கடந்துவிட்டது. இனி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். 

தேசிய வளங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால் ஆரோக்கியமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரப்போவதில்லை. இந்த சூழலில் சர்வதேச சக்திகள், எமது பலவீனமான, வீழ்ச்சிகண்டுள்ள இராச்சியத்தை கைப்பற்றும் முயற்சியில் சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றன. 

உலக வல்லரசுகள் பலமான அரசியல் உடன்படிக்கைகள், நிதி உடன்படிக்கைகளை வைத்துக்கொண்டு எமது தேசிய வளங்களை மட்டுமல்ல, வலுசக்தி, மூலதன வளங்களையும்  கைப்பற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எம்மால் விடுபட முடியாத அடிமைத்தனத்திற்குள்  சகலரையும் நெருக்கும் நோக்கத்தில் நாட்டை ஆளும் இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் முயற்சிக்கின்றனர். இவர்களின் பிடியில் இருந்து  நாட்டை விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.