(எம்.மனோசித்ரா)

டொலர் நெருக்கடியின் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் டொலர் நெருக்கடிக்கு எவராலும் உடனடி தீர்வை வழங்க முடியாது.

நெருக்கடிக்கு தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐ.தே. கட்சிக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை  முன்னெடுப்போம் - தயாசிறி ஜயசேகர | Virakesari.lk

சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு செவ்வாய்கிழமை (14) கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாவனைக்கு பொறுத்தமற்ற சமையல் எரிவாயு நிச்சயம் திருப்பி அனுப்பட வேண்டும். ப்ரோபேன் மற்றும் பியூடேன் ஆகிய இரசாயன பதார்த்தங்களின் விகிதம் மாற்றப்பட்டுள்ளமையால் ஏற்பட்ட அசாதாரணமான சூழ் நிலையால் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.

இது அபாயம் மிக்க நிலைமை ஆகும். இதன் இறுதி பிரதிபலனாக அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு எதிராகவே வழக்கு தொடர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

சமையல் எரிவாயுவின் இரசாயன பதார்த்த உள்ளடக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னரே அதன் தரம் தொடர்பில் பரிசோதிக்கப்படுவது அவசியமாகும். இந்த நடைமுறையின் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கக் கூடும்.

இதன் காரணமாக நுகர்வோரே பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். அத்தோடு சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் பின்பற்றப்படுகின்ற நடைமுறைகளை தரநிர்ணய சபை சகலருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதி அவருக்குரிய அதிகாரங்களின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளார். இவ்வாறு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் இடம்பெறும். இது வழமையான நடைமுறையாகும். எனினும் இது யுகதனவி ஒப்பந்தத்துடன் தொடர்புபடாது. 

குறித்த ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அது தொடர்பில் ஆராயப்படும். அதனை ஏன் அமைச்சரவைக்கு சமர்பிக்கவில்லை என்று , எமக்கு தெரியாது. அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமே கேட்க வேண்டும்.

டொலர் நெருக்கடியின் காரணமாக பொருட்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருட்களுடன் வருகை தந்துள்ள கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

அவற்றுக்கு வழங்குவதற்கு எம்மிடம் டொலர் இல்லை. இதற்கு யாராலும் உடனடி தீர்வினை வழங்க முடியாது. யாரும் டொலரை கொண்டு வந்து வழங்கப் போவதில்லை. இந்த நெருக்கடிக்கு தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.