கட்டானை - திவுலுபிட்டிய வீதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. டீசல் முடிவடைந்தமை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதுண்டமையாலே இரு பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்தாக கனரக வாகனத்தின் சாரதி, மரண விசாரணையின் போது சாட்சியமளித்துள்ளார்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி  கீர்த்தி ஜயந்த விக்ரமரத்ன  முன்னிலையில்  இடம்பெற்ற   மரண விசாரணையின் போதே, கனரக வாகனத்தின் சாரதி இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

இந்த விபத்தில் கட்டானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ஹோமாகமை, கடுவலையைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகஸ்தர் கீர்த்தி விபுல முனசிங்க (46 வயது), மற்றும் மாத்தறை, கடுவன  பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சாரதியான புத்திக மகேஸ் சந்ரதாச (26 வயது) ஆகியோரே மரணமடைந்தவர்களாவர். 

 குறித்த பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாகனத்தை சரியான முறையில் தரித்து வைக்க தவறிய குற்றத்திற்காக கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.