(நா.தனுஜா)
நிதிமோசடிகள், முறைகேடுகள் தொடர்பில் பாராளுமன்றக்குழுக்களின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்துவந்த பேராசியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை அப்பதவிகளிலிருந்து நீக்கிவிட்டு, தமக்குச் சாதகமான முறையில் செயற்படக்கூடியவர்களை அப்பதவிகளுக்கு நியமிப்பதற்காகவே பாராளுமன்றக்கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்த முறைகேடான அரசாங்கம் தொடர்ந்து செயற்பட அனுமதிக்கமுடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் வெளியிடப்படும் என்றும் அதனைத்தொடர்ந்து தற்போதைய அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்;தது தமது அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
பாராளுமன்றக்கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான அவசியமென்ன என்ற கேள்வியும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் குறித்த வலுவான சந்தேகமும் எழுகின்றது.
குறிப்பாக பாராளுமன்றக்கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் விளைவாக உயர்பதவிகள் பற்றிய குழு மற்றும் பாராளுமன்ற விசேட குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்களான கோப் குழு, கோபா குழு உள்ளிட்ட அனைத்தும் கலையும்.
கோப் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அதன் தலைவரான பேராசிரியர் சரித ஹேரத் எவ்வித பக்கச்சார்புமற்ற விதத்தில் செயற்பட்டார் என்பதைக் கூறுவதற்கு நான் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை.
அண்மைக்காலங்களில் சுற்றுலாச்சபை, முதலீட்டுச்சபை உள்ளடங்கலாகப் பல்வேறு அரச கட்டமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் மேற்படி குழுக்களால் விரிவான விசாரணைகளும் ஆராய்வுகளும் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இருப்பினும் அவ்விசாரணைகளால் அரச கட்டமைப்புக்கள் பலவற்றின் பிரதானிகள் அதிருப்தியடைந்திருப்பதாக அறியமுடிகின்றது. குறிப்பாக அதன் காரணமாகவே முதலீட்டுச்சபையின் உயர்மட்ட அதிகாரிகள் பதவி விலகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று சிகரெட் விலை உயர்த்தப்பட்ட போதிலும் அதற்கான வரி அதிகரிக்கப்படாமை தொடர்பிலும் மற்றொரு பாராளுமன்றக்குழுவினால் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நிதிமோசடிகள் குறித்து அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான பாராளுமன்றக்குழு நிதியமைச்சின் அதிகாரிகளை விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.
எனவே இத்தகைய செயற்பாடுகளால் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் ஏற்கனவே அதிருப்தியடைந்திருந்த நிலையில், ஆளுந்தரப்பு உறுப்பினர்களதும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் அரச அதிகாரிகளினதும் ஊழல் மோசடிகள் வெளிப்பட்டுவிடும் என்பதால் பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை பாராளுமன்றக்குழு தலைவர் பதவிகளிலிருந்து நீக்குவதற்காகவே ஜனாதிபதியினால் பாராளுமன்றக்கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது என்று கருதுகின்றோம். அதுமாத்திரமன்றி தமக்கேற்றவாறு செயற்படக்கூடிய நபர்களை அப்பதவிகளுக்கு நியமிப்பதற்கும் ஆளுந்தரப்பு திட்டமிட்டிருக்கின்றது.
அடுத்ததாக சீனாவிலிருந்து 'கழிவு' உரத்தை இறக்குமதிசெய்த கம்பனிக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கு அரசாங்கம் உடன்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எமது நாடு கொள்வனவு செய்யாத உரத்திற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 6.7 மில்லியன் டொலர்களை சீனாவிற்கு வழங்குவதென்பது சாதாரண விடயமல்ல. எனவே இந்தத் தரமற்ற உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான கோரிக்கை யாரால் முன்வைக்கப்பட்டது? இதில் இடம்பெற்றுள்ள தவறுக்கு யார் காரணம்? என்பது குறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் வருடத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமொன்று உருவாகுவதுடன் தற்போது மோசடிகளிலும் குற்றங்களிலும் ஈடுபட்ட அனைவரும் எமது அரசாங்கத்தில் தண்டிக்கப்படுவீர்கள் என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம். அது ரணில் விக்ரமசிங்கவின் 'டீல் அரசாங்கம்' போன்று செயற்படாது.
மேலும் அடுத்த வருடம் பெருமளவான கடன்தொகையை மீளச்செலுத்தவேண்டிய நிலையில் நாடு இருக்கின்றது. கடன்களை வழங்கிய வெளிநாடுகளிடம் 'மெதமுலான சண்டியர்கள்' போன்று செயற்படமுடியாது என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ளவேண்டும். தற்போது நாட்டின் வசமுள்ள மிகச்சொற்பளவான வெளிநாட்டுக்கையிருப்பு ஒருமாதகாலத்திற்கு அவசியமான உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே போதுமானதாகும். அவ்வாறிருக்கையில் அரசாங்கம் கடன்களை மீளச்செலுத்துவதற்கு எங்கிருந்து நிதியைத் திரட்டிக்கொள்ளும்? அதுமாத்திரமன்றி இன்னும் சில வாரங்களில் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். அதனைத்தொடர்ந்து உணவுப்பொருட்களுக்குப் பஞ்சம் ஏற்படும். எனவே மக்களைப் படிப்படியாக நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து செயற்படுவதற்கு அனுமதிக்கமுடியாது. அதன்படி அடுத்த ஆண்டு நாம் இந்த அரசாங்கத்தை நிச்சயமாகப் பதவியிலிருந்து கவிழ்ப்போம். சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்த தனியொரு கட்சியான எம்மால் உதவிகளுக்காக உலக வங்கியையோ, சர்வதேச நாணய நிதியத்தையோ, ஐரோப்பிய ஒன்றியத்தையோ அல்லது சர்வதேச நாடுகளையோ நாடமுடியும். அதன்மூலம் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கான தவணைக்காலத்தை நீடித்துக்கொள்ளலாம். அதுமாத்திரமன்றி மேலும் பல்வேறு வழிமுறைகளின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது செயற்திட்டத்தை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டாhர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM