தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனாத் தொற்று பரவாமல் தடுப்பதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 15 ஆம் திகதியுடன் கொரோனாத் தொற்று பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவு காலம் முடிவடைய உள்ளது. 

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், புதிய வகை உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரோன் தொற்று பரவாமல் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்தும், முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பின்னர் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனாத் தொற்று நோய் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்திருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''சமூக, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31ஆம் திகதி மற்றும் ஜனவரி முதலாம் திகதி ஆகிய இரண்டு நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உரிய கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.'' என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.