மிகமோசமான செயற்பாடுகளுக்கான 'இராஜதந்திர திரையாக' சீனாவை கருதும் இலங்கை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Published By: Vishnu

13 Dec, 2021 | 08:57 PM
image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கம் அதன் மிகமோசமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறைப்பதற்கான இராஜதந்திர ரீதியான திரையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சீனாவின் பக்கம் திரும்பியிருக்கின்றது. 

இருப்பினும் பொருளாதார ரீதியில் அதன் மிகமுக்கிய தொடர்புகள் அனைத்தும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனேயே பேணப்பட்டுவருகின்றன. 

ஆகவே அதனைப் பயன்படுத்தி இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான அழுத்தங்களைப் பல்வேறு வழிமுறைகளிலும் பிரயோகிப்பதற்கு அமெரிக்கா முன்வரவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் சிப்டன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் உரியவாறு திருத்தியமைக்கப்படுவதற்கோ அல்லது முழுமையாக இல்லாதொழிக்கப்படுவதற்கோ அவசியமான அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கவேண்டும். 

அதுமாத்திரமன்றி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 'இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல்' தொடர்பில் தகவல்களைத் திரட்டுவதற்கான விசாரணையொன்று அமெரிக்க காங்கிரஸின் டொம் லான்ரோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த வாரம் நடத்தப்பட்டது.

 அவ்விசாரணைகள் டொம் லான்ரோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதித்தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களான ஜேம்ஸ் பி.மெக்கோவேர்ன், கிறிஸ்டோபர் எச்.ஸ்மித் மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. 

அதில் முன்னிலையாகி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை தொடர்பில் சாட்சியமளிக்கையிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதுடன் மிகமோசமான போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு சுமார் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 

இருப்பினும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் மிகுந்த கரிசனைகளை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பல்லெட் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை முழுமையாக மறுதலிக்கும் நிலையிலிருப்பதுடன் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கான 'எச்சரிக்கை சமிக்ஞைகளும்' தென்படுகின்றன. 

சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து அடக்குமுறைகளுககு உள்ளாக்கப்படுவதுடன் ஓரங்கட்டும் வகையிலான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் இலக்குவைக்கப்படுகின்றார்கள்.

ஒரு தசாப்தகாலமாக ஆட்சியிருந்த மகிந்த ராஜபக்ஷ கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 2015 - 2019 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின்கீழ் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்தன. 

சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் சமூகங்கள், உள்நாட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் போன்ற பல்வேறு தரப்புக்களினதும் தொடர்ச்சியான அழுத்தங்கள் புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமையை ஏற்றுக்கொள்வதற்கும் அவை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வழிவகுத்தன. 

அதன் ஓரங்கமாக உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு வழங்குதல், பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்கிய உள்நாட்டுப்பொறிமுறையின் ஊடாக நீதியை  நிலைநாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரணை வழங்கியது. 

அதுமாத்திரமன்றி கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ள - சித்திரவதைகளுக்கும் வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கும் வழிவகுக்கக்கூடிய பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கான வாக்குறுதியும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறெனினும் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடையும்போது எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறுவதைக் குறைக்கக்கூடிய வகையிலான கட்டமைப்பு மற்றும் சட்டரீதியான மறுசீரமைப்புக்களிலும் பொறுப்புக்கூறலை முன்னிறுத்திய நடவடிக்கைகளிலும் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல்களில் அமெரிக்கப்பிரஜைகள் மூவர் உள்ளடங்கலாக சுமார் 260 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அது இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. 

அதனைத்தொடர்ந்து 2005 - 2015 வரையான காலப்பகுதியில் பாதுகாப்புச்செயலாளராகக் கடமையாற்றியவரும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியதுடன் தீவிரவாதத்தை இல்லாதொழித்தல், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு சர்வதேசத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நகர்வுகளை முடக்குதல், 'போர் வெற்றியாளர்களைப்' பாதுகாத்தல் ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே அவரது தேர்தல் பிரசாரம் அமைந்திருந்தது.

 அப்போது கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைப்பிரஜாவுரிமைக்கு மேலதிகமாக அமெரிக்க பிரஜாவுரிமையையும் கொண்டிருந்ததுடன் இலங்கைப்படையினரால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலும் அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்புபட்டிருந்த ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள், ஏனைய மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் என்பனவும் உள்ளடங்கியிருந்தன. இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானார். 

அதேபோன்று பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான பலர் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

 ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபித்தமையாகும். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்மோசடிகள் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளிலிருந்து அரசியல் கூட்டணி உறுப்பினர்கள், பாதுகாப்புத்தரப்பினர் மற்றும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களை விடுவித்துக்கொள்வதே அந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.

 

அதேபோன்று கடந்த அரசாங்கம் இணையனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்திலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் விலகியது. அதற்கான பிரதிபலிப்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் அவற்றை ஆராய்வதற்கும் உரியவாறு ஆவணப்படுத்துவதற்குமான 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிபீடமேறியதிலிருந்து சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் உள்ளடங்கலாக கடந்தகால மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும்கோரிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்கும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளை மிகையாகப் பயன்படுத்திவந்திருக்கின்றது. இந்நடவடிக்கை கொழும்பு உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாட்டிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதிலும், சிறுபான்மையினர் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இது மிகவும் தீவிரம் பெற்றிருக்கின்றது. மேலும் நீதித்துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை மட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் நாட்டின் சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டதுடன் அவை எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான வன்முறைகள் ஏற்படுவதற்கான கரிசனைகளைத் தோற்றுவித்தன. அதன் முதற்கட்டமாக சுதந்திரதினக்கொண்டாட்ட நிகழ்வில் தமிழில் தேசியகீதம் இசைப்பது நிறுத்தப்பட்டது. அதேபோன்று கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கான கொள்கை வெளியிடப்பட்டது. சிறுபான்மையினர் வாழும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியொன்று கடந்த 2020 ஜுன்மாதம் உருவாக்கப்பட்டது. அச்செயலணி பாதுகாப்புப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பௌத்த தேரர்களை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.

 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உரியவாறு திருத்தியமைக்கப்படுவதற்கோ அல்லது முழுமையாக இல்லாதொழிக்கப்படுவதற்கோ அவசியமான அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கவேண்டும். அதுமாத்திரமன்றி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். இலங்கையின் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளுக்கான இடைவெளியை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கூட்டிணைந்து அமெரிக்க முன்னெடுக்கவேண்டும்.

 

தமது மிகமோசமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இராஜதந்திர ரீதியான திரை உள்ளடங்கலாகப் பல்வேறு காரணங்களுக்கான இலங்கை சீனாவின் பக்கம் திரும்பியிருக்கின்றது. இருப்பினும் இலங்கையினால் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றுடனேயே பேணப்பட்டுவருகின்றது. ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் அடைந்திருக்கக்கூடிய தோல்வி மற்றும் எதிர்காலத்தில் இருநாடுகளினதும் இராணுவத்தினருக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் ஜோபைடன் அரசாங்கத்துடனும் இலங்கை அரசாங்கத்துடனும் தெளிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும். இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடி, இலங்கை விவகாரங்களில் அதிகரித்துவரும் சீனாவின் தலையீடு என்பன ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் போன்ற ஜனநாயக நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04