(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் கிராமபுற மக்களின் வாழ்க்கை தரம் குறித்து அக்கறை கொள்ளாதவர்கள், இன்று கிராமிய பொருளாதாரம் குறித்து அரசாங்கத்திற்கு பாடம் கற்பித்து முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகரமான அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்,2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி நான்கு மாத  காலம் மாத்திரம் தான் சுதந்திரமாக செயற்பட முடிந்தது.

முழு உலகிற்கும் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட் தாக்கத்தை நாமும் எதிர்க்கொள்ள நேரிட்டது. அபிவிருத்தி பணிகளை தாமதப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் நடவடிக்கைகளில் தெற்காசிய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளது. 2022ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமையும்.

அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களை விமர்சிக்கும் முயற்சிகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகிறது.போலியான செய்திகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் கவனம் செலுத்துவது பயனற்றது.

கிராமிய அபிவிருத்திக்காக 2022 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கிராமிய மக்கள் குறித்து கவனம் செலுத்தாதவர்கள் தற்போது கிராமிய மக்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்.

சேதன பசளை திட்டத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இரசாயன உர பயன்பாட்டில் ஏற்படும் பாரதூர விளைவுகள் குறித்து எவரும் கருத்துரைப்பதில்லை.சேதன பசளை திட்ட கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.