(ஆர்.யசி)

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையின் பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சில தினங்களில் வழக்கு தொடர நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன், அதிகாரசபையின் சட்ட ஆலோசனை குழு இது குறித்து  சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றவருவதாக  கூறப்படுகின்றது.

நுகர்வோர் அதிகாரசபையின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடமும் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இலங்கையில் விநியோகிக்கும் சமையல் எரிவாயுக்களின் கலப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து கடந்த சில மாதங்களாக நாட்டில் பல்வேறு ஏரியாவு கசிவு மூலமாக வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

சம்பவங்களுடன் தொடர்புபட்ட இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன்  கடந்த பத்து நாட்களில் 150 வெடிப்பு சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளன.

இதனை அடுத்து நுகர்வோர் அதிகாரசபை குறித்த எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாகியுள்ள இந்த செயற்பாடுகள் குறித்து எரிவாயு விநியோக நிறுவனங்கள் கூடிய கவனம் எடுத்திருக்க வேண்டும் என்பதையும், தொடர்ச்சியாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் ஒரு சில தினங்களில் இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் எதிராக வழக்கு தொடர தாம் தீர்மானித்துள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் சட்டக்குழு தீர்மானித்துள்ளது. அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் இது குறித்து வினவிய போது அவர் கூறுகையில், 

ஏரியாவு கசிவு காரணமாக ஏற்படுகின்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான நிலைமைகளை நாம் அவதானித்து வருகின்றோம். நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கையொன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதில் குறித்த இரண்டு எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் செல் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர். ஏற்கனவே ஒரு வழக்கும் பதிவாகியுள்ள நிலையில் இது குறித்து நாம் அவதானம் செலுத்தி வருகின்றோம்.

அதேபோல் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ள நிலையில்  இதனை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்க முடியாதுள்ளது. 

எனினும் அச்சுறுத்தல் நிலைமைகளை பூச்சியமாக்கும் விதத்தில் நுகர்வோருக்கான எரிவாயு சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்கான சகல விதமான நடவடிக்கைகளையும் நாம் கையாள நிலைக்கின்றோம். 

இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமைகளை தவிர்க்க என்ன செய்ய முடியுமோ அதற்கான ஆலோசனைகளை யார் முன்வைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆரோக்கியமான விதத்தில் செயற்பட தயாராகவே உள்ளோம் என்றார்.