வாஷிங்டன்/ஜெனீவா (சின்ஹுவா) அமெரிக்க வரலாற்று நூல் எதையாவது படித்துப்பாருங்கள்.அந்த நாடு ஒரு மோதலில் பங்கேற்காத நீண்ட காலகட்டமொன்றை உங்களால் காண்பது பெரும் கஷ்டம். " உலக வரலாற்றில் போரை மிகவும் விரும்புகிற நாடு" என்று முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது நாட்டை மிகவும் எளிதாக வர்ணித்தார்.
போர்கள் மீதான அமெரிக்காவின் இந்த இச்சைக்கு வரலாற்று ரீதியான, வர்த்தக ரீதியான மற்றும் புவிசார் அரசியல் பின்புலங்கள் இருக்கின்றன.
அவற்றின் அடிப்படையில்தான் சுதந்திரத்தை,நலன்களை மற்றும் செல்வாக்கை பெற்றது.கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தை நிறுவி தக்கவைத்துக்கொள்வதற்கான முடிவில்லா பிரயத்தனத்தில் உலகம் பூராகவும் போர்களை தொடக்கியிருக்கிறது அல்லது ஈடுபட்டிருக்கிறது.
வரலாற்றாசிரியர்களும் கல்விமான்களும் கூறியிருக்கும் விபரங்களின் பிரகாரம் நோக்கினால் அமெரிக்கா போர்முறைகளில் இருந்து தனக்கு தீனிபோட்டு இலாபம் சம்பாதிக்கின்ற ஒரு இடையறாத போர் இயந்திரமாக உருமாறியிருக்கிறது.அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை நியாயப்படுத்தி வெள்ளையடிப்பதில் ஊடகங்கள் உடந்தையாக செயற்படுகின்றன.போர்ப்பித்து குணப்படுத்தமுடியாத எல்லையை தாண்டிவிட்டது.
போர்களில் இருந்து தீனியைப் பெறுதல்
" எமது நாடு இனப்படுகொலைகளில் பிறந்தது.சுதேச சனத்தொகையை அழித்தொழிப்பதை ஒரு தேசியக்கொள்கை விவகாரமாகக் கருதி செயற்பட்ட ஒரேயொரு தேசம் நமது தேசம்தான்"என்று அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்க தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 ஆம் ஆண்டில் எழுதிய 'எம்மால் ஏன் முடியாது' என்ற நூலில் எழுதினார்.
வட அமெரிக்காவில் இருந்த 13 பிரிட்டிஷ் காலனிகளை சேர்த்தே அமெரிக்கா தாபிக்கப்பட்டது. அந்த காலனிகளில் வாழ்ந்த சுதேசிகளில் சிலர் முதலாவது ஐரோப்பியர்கள் அந்த கண்டத்தில் குடியேறுவதற்கு உதவினார்கள்.சுதேசிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள்.
ஆனால், புரட்சி யுத்தத்திற்கு பிறகு சுதேச அமெரிக்கர்களின் அல்லது இந்தியர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக சமஷ்டி அரசாங்கம் அவர்களை அழித்தொழிப்பதற்கான ஒரு நூற்றாண்டு கால நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
" நாம் அவர்களை படுகொலை செய்தோம்" என்று அமெரிக்க-- சுவிஸ் வரலாற்றாசிரியரும் ஜனநாயக மற்றும் ஒப்புரவான சர்வதேச ஒழுங்கொன்றை மேம்படுத்துதல் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின முன்னாள் சுயாதீன நிபுணருமான அல்பிரட் -மொறிஸ் டி சாயஸ் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சின்ஹுவாவுக்கு அளித்த பேட்டியொன்றின்போது கூறினார்." நாம் இந்தியர்களை மோசமானவர்களாகவே நோக்கினோம்.அவர்களை பிசாசுகள் என்று அழைத்தோம். நாம் அவர்களை நரிகள் என்று அழைத்தோம். போட்டியாளரை கொலைசெய்யுமுகமாக அவர்களை மோசமானவர்களாக காடுடுவது மிகவும் சுலபமானது"என்றும் அவர்கூறினார்.
1840 களில் மெக்சிக்கோ-- அமெரிக்க போருக்கு பிறகு தொடர்ச்சியாக இடம்பெற்ற நிலக்கொள்வனவுகள் மற்றும் நில இணைப்புகளைத் தொடர்ந்து அமெரிக்கா தன்னை மேற்கு நோக்கி விஸ்தரிக்க விதிவசப்பட்டது என்ற 19ஆம் நூற்றாண்டு கோட்பாட்டின்( Manifest Destiny) கீழ் பாரிய நிலப்பகுதியை தனதாக்கிக்கொண்டது.
1789 - 1854 காலகட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க நிலப்பகுதி விரிவாக்கமே மனித வரலாற்றில் மிகவும் மிகவும் விரிவானதும் துரிதமானதுமாகும் என்று மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க ஆய்வுகள் சிரேஷ்ட விரிவுரையாளராக இருக்கும் போல் அஸ்ட்வூட் ' War is the American way of life ' என்ற தலைப்பிலான தனது 2003 கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்." இனப்படுகொலைகளுக்கு வழிவகுத்த ஆயுத வன்முறைகளின் மூலம் அந்த நில விரிவாக்கம் நடந்தேறியது".
1890 களில் அமெரிக்கா கடல் கடந்த நில பிராந்திய விரிவாக்கத்தை முன்னெடுக்கத் தொடங்கியது.சிவில் யுத்தத்திற்கு பல தசாப்தங்கள் பின்னரான அந்த விரிவாக்கம் அமெரிக்க வெளியுறவுக்கொள்கை இலக்குகளை தாமதித்தது. பசுபிக் கடலிலும் தூரகிழக்கிலும் கடல்சார் மற்றும் வாணிப மேலாதிக்கத்துக்கு போட்டியிடுவதற்கு தங்களது நாடு உரித்துடையது என்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் நம்பத்தொடங்கினாார்கள் என்று 'வெளியுறவுகளும் ஏகாதிபத்தியமும்'என்ற விடயதானத்தில் நிபுணத்துவம் கொண்ட காலஞ்சென்ற அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜூலியஸ் பிறட் கூறியிருந்தார்.
ஸ்பெயினுடனான 1898 போருக்கு பிறகு அமெரிக்கா ஒரு பசுபிக் வல்லாதிக்க நாடாக மாறியது.கரிபியன் தொடங்கி தென்கிழக்காசியா வரை புதிய நிலப்பிராந்தியங்களை அமெரிக்கா கைப்பற்றியது. இரண்டாவது உலகமகா யுத்தத்திற்கு பிறகு அது ஒரு வல்லரசாக உயர்ந்தது." இந்த போருக்கு பிறகு உலகின் மிகவும் சக்திவாய்ந்த தேசமாக வெளிக்கிளம்பியிருக்கிறோம் என்று எமக்கு நாம் கூறிக்கொள்கிறோம் " என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் 1945 ஆகஸ்ட் 9 வெள்ளை மாளிகையில் இருந்து ஆற்றிய உரையில் பிரகடனம் செய்தார்.
இராணுவ ரீதியில் வல்லமைகொண்ட அமெரிக்கா முன்னைய தசாப்தங்களில் கொரிய போர்,வியட்நாம் போர் மற்றும் வளைகுடா போர் உட்பட தொடர்ச்சியான பல முக்கியமான போர்களை தொடுத்தது அல்லது தலையிட்டது.அதேவேளை,வெளிப்படையானதும் மறைமுகமானதுமான பெருவாரியான இராணுவ நடவடிக்கைகளை அது முன்னெடுத்தது அல்லது சம்பந்தப்பட்டது.
2001 செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா தொடுத்த பயங்கரம் மீதான உலகளாவிய போர் அதிர்ச்சி தரும் வகையில் 2018--2020 காலகட்டத்தில் 85 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டிருந்தது.உலகின் ஒரேயொரு வல்லரசு உலகளாவிய ரீதியில் குறைந்தபட்சம் 80 நாடுகளில் சுமார் 750 தளங்களைக் கொண்டிருந்தது. இராணுவ வல்லமையில் அடுத்த பத்து இடங்களில் இருக்கும் நாடுகள் கூட்டாக அவற்றின் ஆயுதப்படைகளுக்கு செலவிடும் தொகையை விடவும் கூடுதலான தொகையை அமெரிக்கா தனது ஆயுதப்படைகளுக்காக செலவிடுகிறது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.
" இந்த போர் நிலைவரம் அமெரிக்க வரலாற்றில் நியதியாகும்" என்று எழுத்தாளரும் அரசியல் மானிடவியல் பேராசிரியருமான டேவிட் வைன் United States of war ; A Global history America's endless conflicts,from Columbus to the Islamic State என்ற தனது 2020 நூலில் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் வரலாற்றில் இருபது வருடங்களுக்கும் குறைவான ஒரு காலகட்டத்தை தவிர மற்றும்படி அதன் துருப்புக்கள் வெளிநாடுகளை ஆக்கிரமித்திருக்கின்றன ; மோதல்களில் ஈடுபட்டிருக்கின்றன என்று அமெரிக்க காங்கிரஸின் ஒரு பொதுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது." அமெரிக்க மக்கள் பெரும்பாலும் ஒருபோதும் சமாதானத்தில் இருந்ததில்லை" என்று நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் சமூக,கலாசார ஆய்வு மற்றும் வரலாற்று பேராசிரியராக இருக்கும் நிகில் பால் சிங் கருத்து வெளியிட்டார்.
ஆப்கானிஸ்தான் போர் தொடங்கியதற்கு பிறகு பென்டகன் 14 ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக செலவழித்திருக்கிறது.அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அரைவாசிக்கும் இடைப்பட்ட தொகை பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களின் கைகளுக்கு சென்றிருக்கிறது.
அதேவேளை,கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக ஆயுத தயாரிப்பாளர்கள் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளுக்காக 250 கோடி டொலர்களுக்கும் அதிகமாக செலவழித்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அத்துடன் இந்த நடவடிக்கைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் வருடாந்தம் பணிக்கமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்று பிறவுண் பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவுகளில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
மேலும் உயர்மட்ட பென்டகன் அதிகாரிகள் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுக்காக பணியாற்றுவதற்காக தங்களது பதவிகளில் இருந்து அடிக்கடி விலகுகிறார்கள். அங்கே அவர்கள் ஆலோசகர்களாக,நிறைவேற்று அதிகாரிகளாக, சபைகளின் உறுப்பினர்களாக பதவிகளில் இருக்கிறார்கள்.
அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வாபஸ் பெற்றுக்கொண்டதையடுத்து கடந்த ஆகஸ்டில் முடிவுக்கு வந்த ஆப்கான் போர் சுமார் இருபது வருட காலம் ஏன் நீடித்தது என்பது இப்போது விளங்குகிறது அல்லவா என்று பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இணை பேராசிரியராக இருக்கும் டானியல் கோவாலிக் வீடியோ இணைப்பின் மூலமாக சின்ஹுவாவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கேள்வியெழுப்பினார்.
" உலக சமாதானத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமெரிக்கா இருக்கிறது என்பதே உலகின் அபிப்பிராயம் என்று சர்வதேச கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன" என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் நிபுணரும் வெளியுறவுக்கொள்கை விமர்சகருமான நோம் சொக்ஸி ஆகஸ்டில் அமெரிக்க சஞ்சிகையான 'கொவுன்ரர்பஞ்ச்' சுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
"போர்களின் மூலமாக யார்யாரை எல்லாம் காப்பாற்றப்போவதாக நாம் பாசாங்கு காட்டினோமோ அவர்களுக்கு உதவுவதில் அமெரிக்கா ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.தவறாக வழிநடத்தப்பட்ட போர்களில் அந்தந்த நாட்டு சனத்தொகையின் ஆதரவு அமெரிக்காவுக்கு ஒருபோதும் இருக்கவில்லை"என்று அமெரிக்க பொருளியல் நிபுணரும் பொதுக்கொள்கை ஆய்வாளருமான ஜெவ்ரி சாச்ஸ் செப்டெம்பரில் பொஸ்டன் குளோபில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
" எமது தேசம் நூற்றாண்டுகளாக போரில் ஈடுபட்டுவருகின்றது.சமாதானத்தையும் பிரச்சினைத் தீர்வையும் அடிப்படையாகக் கொண்ட புதியதொரு வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்குமா? அதுவே உண்மையான கேள்வி" என்று சாச்ஸ் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM