(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினர் எதிர்வரும் வாரம்  பரிசோதனை அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளனர்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான காரணம் மற்றும் தீர்வு முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  கடந்த மாதம் 30 ஆம் திகதி எட்டு பேர் அடங்கிய குழு நியமித்தார்.

அனைத்து தரப்பினர்களின் ஆலோசனைகளை பெற்று இரண்டு வார காலத்திற்குள் விபத்துக்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு ஆகியவற்றை உள்ளக்கிய அறிக்கையை சமர்பிக்குமாறு குறிப்பிடப்பட்டது.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் நியமிக்கப்பட்டு குழுவில் சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்இமொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் த சில்வா மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டப்ள்யூ.டி. டப்ள்யூ ஜயதிலக, பேராசிரியர் ப்ரதீப் ஜயவீர, இலங்கை கண்டுப்பிடிப்பாளர்கள் ஆணையகத்தின் ஆணையாளர் பேராசிரியர் நாராயன் சிறிமுது,கைத்தொழில் தொழினுட்ப  நிறுவனத்தின் மேலதிக  நிறைவேற்று பணிப்பாளர் ஜெனரால் பேராசிரியர் சுதர்ஷன சோமசிறிஇஇலங்கை- ஜேர்மனி நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் சுஜூவ மஹகம ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

'நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் குழுவினர் கடந்த இரண்டு வாரகாலமாக பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மூன்று பிரதான நிபந்தனைகளுக்கு அமைய சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் நான்காம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு விநியோகித்த முத்திரை நீக்கப்படாத சிலிண்டர்களை மீள பெறுமாறு நுகர்வோர் அதிகார சபை லிட்ரோ  நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.