(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

புதிய அரசியமைப்பு உருவாக்கம் திட்டமிட்ட வகையில் பிற்போடப்படுகிறது. மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கின்றமை கவலைக்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் கால பிரசார மேடைகளில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கம், ஒற்றையாட்சி முறைமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகியன பிரதான பேசுபொருளாக காணப்பட்டது.

காலத்திற்கு பொருந்தும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை 69 இலட்ச மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் வெற்றியை தொடர்ந்து அரசியலமைப்பின் 19ஆவது சட்டம் நீக்கப்பட்டு 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் விரைவாக உருவாக்கப்பட்டது. 20ஆவது திருத்தத்தில் மக்களாணைக்கு முரனான ஒரு சில விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இரட்டை குடியுரிமையினை உடையவர் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும்,அரச உயர்பதவிகளை வகிப்பதற்கும் 20ஆவது திருத்தம் ஊடாக அனுமதி வழங்கப்பட்டது.20ஆவது திருத்தத்தில் காணப்பட்ட மக்களாணைக்கு முரனான விடயங்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக திருத்திக் கொள்ளப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு ஆதரவு வழங்கினோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டாண்டு பதவி காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் அலிசப்ரி பாரர்ளுமன்றில் வாக்குறுதியளித்தார். 

இதுவரையில் மூல வரைபு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நடடிவக்கைகள் கொவிட் தாக்கத்தின் காரணமாக தாமதமடைகிறது என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் திட்டமிட்ட வகையில் பிற்போடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தேவையற்ற பிரச்சினைகளை மாகாண சபை முறைமை ஊடாக ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபை முறைமையை இரத்து செய்வதாக குறிப்பிடப்பட்டது. தற்போது மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சி;க்கின்றமை மக்களாணைக்கு விரோதமானதாகும் என்றார்.