(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சமூக படுகொலைகள் தொடர்பில், முன்னால் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ மற்றும்  மெகஸின் சிறைச்சாலையின்  முன்னாள் அத்தியட்சர்  லமாஹேவகே எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும்  2022 ஜனவரி 6 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விவகாரத்தில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணைகள்  முடிவுக்கு வந்துள்ள நிலையில்  வழக்கினை விசாரணை செய்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது. 

வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவுற்றதுடன், 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்  எனும் சம்பிரதாயம் உள்ள போதும், இந்த வழக்கின் மிக நீண்ட சாட்சிப் பட்டியல் உள்ளதால் அவற்றை ஆராய்ந்து ஜனவரி 6 ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான  கிஹான் குலதுங்க தலைமையில்   பிரதீப் ஹெட்டி ஆரச்சி, மஞ்சுள தில்கரத்ன  ஆகியோர் அடங்கிய  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  டிலான் ரத்நாயக்க  இவ்வழக்கில் ஆஜரானதுடன் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான நளின் இந்ரதிஸ்ஸ மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஆஜராகினர்.

கடந்த  2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படு கொலைகள் தொடர்பில், அன்றிலிருந்து 5 வருடங்கள் உரிய விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை. 2017 ஆம் ஆண்டே சி.ஐ.டி. ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டின் இறுதி காலப்பகுதியில் விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டது.

குறித்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சான்றுகள், சாட்சிகளின் அடிப்படையில்,   குற்றவியல் சட்டத்தின் 450 (4) ஆம் அத்தியாயத்துக்கு அமைய குற்றத்தின் பாரதூரம், சந்தர்ப்ப விடயங்கள்,  தேசிய மற்றும் சர்வதேச அளவில்  ஏற்பட்ட அவதானிப்பு,  கண் கண்ட மற்றும் அறிவியல் தடயங்களை மையப்படுத்தி  மூவர் கொண்ட சிறப்பு நீதிபதிகள் முன் மேல் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் , பிரதம நீதியரசரிடம் கோரிய நிலையில், இவ்வழக்கை விசாரணை செய்வதற்கான சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப் பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு சட்ட விரோதப் பொருட்களை கைப்பற்றும் நோக்குடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் சிறைப்பாதுகாப்பு அதிகாரிகளால் கடந்த 2012.11.09 ஆம் திகதி விஷேட சோதனை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் குழம்பியுள்ள நிலையில், நாளார்ந்த நடவடிக்கைகளுக்காக ஆயுதங்களை விநியோகம் செய்யும் சிறை ஆயுத களஞ்சியத்தை அவர்கள் சூறையாடி அதில் இருந்த ஆயுதங்களை கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.  நிலைமையானது இதன்போது பெரும் கலவரமாக  மாறியுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

இந்நிலையிலேயே கலகத்தின் இடை நடுவே கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க வெலிக்கடை சிறைச்சாலையை பொலிஸ் விஷேட அதிரடிப் படை சுற்றிவலைத்துள்ளது. 

இதன்போது 2009 நவம்பர் 9 ஆம் திகதி இரவு 12.00 மணியளவில்  பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு, சிறை அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியூடாக தப்பிச் செல்ல சிலர் முயன்றுள்ளனர். இதன்போது அதிரடிப் படை நடாத்திய பதில் தாக்குதலில் இருவர் காயமடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்ற கைதிகள் மீது அதிரடிப் படை நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பதிவாகியுள்ள  சாட்சியங்களின் பிரகாரம், இந்த சிறைக் கலவரமானது இராணுவமும் தலையீடு செய்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின்னர் தெரிவு செய்யப்பட்ட 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலன் எனப்படும் மலிந்த நிலேத்திர பெல்பொல, நிர்மல அத்தபத்து,மொஹமட் விஜேரோஹன, களு துஷார எனப்படும் துஷார சந்தன,அசரப்புலிகே ஜோதிபால,ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா,  சுசந்த பெரேரா, கொண்ட அமில எனப்படும் மலித் சமீர பெரேரா ஆகிய எட்டுபேருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நீண்ட வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து தற்போது தீர்ப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.