(நா.தனுஜா)
11 கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவை வடமேல் மாகாண ஆளுநராக நியமித்தமையே இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கம் வழங்கியிருக்கும் பரிசாகும் என்று தெரிவித்துள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகளுக்கு சிறந்த இடத்தை வழங்கும் என்பதை இதன்மூலம் விளங்கிக்கொள்ளமுடிவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு ட்ரயல் அட்பார் விசேட நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கில் 14 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு முந்தைய நாளான நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்படி வழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் செயற்பட்டுவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் என்ற அடிப்படையில் பிரிட்டோ பெர்னாண்டோவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.