( நமது நிருபர்)
நாடளாவிய ரீதியில் கேஸ் சிலிண்டர்கள் தொடர்பிலான அனர்த்தங்கள் பதிவாகும் நிலையில், சிவப்பு நிறத்திலான முத்திரை ( சீல்) இடப்பட்ட சிலிண்டர்கள் புதிதாக தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை பொது மக்கள் பயனப்டுத்த முடியும் எனவும், அதனால் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிது எனவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நேற்று ( 9) இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னிலையில் தெரிவித்தனர்.
பிரதானமாக இலங்கையில் சமயல் எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள லிட்ரோ மற்றும் லாப் ஆகிய இரு நிறுவனங்களும் பச்சை, மஞ்சள், நீலம் என பல வர்ணங்களிலான முத்திரை ( சீல்) கொண்ட கேஸ் சிலிண்டர்களை கடந்த காலங்களில் சந்தைக்கு விநியோகித்திருந்த நிலையில், அவை அனைத்தையும் மீளப் பெறுமாறு அறிவித்துள்ளதாகவும், அவை ஆபத்தை ஏற்படுத்தலாம் என உணரப்பட்டதால் அவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சமயல் எரிவாயு விடயத்தில் தொடர் அனர்த்தங்கள் பதிவாகும் நிலையில் அது தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு இரு முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
அந்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் நேற்று ( 9) இலங்கை மனித உரிமைகள் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களான வைத்தியர் எம்.எச். நிமல் கருணாசிறி, அனுஷ்யா சண்முகநாதன், விசாரணை விவகார பணிப்பாளர் சுலாரி லியனகம,, பணிப்பளர் நிஹால் சந்ரசிறி, விசாரணைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் லால் வீரசிங்க உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஊடகவியலாளர்களான இந்துனில் உஸ்கொட ஆரச்சி மற்றும் எம்.எப்.எம். பஸீர் ஆகியோர் ஆணைக் குழு முன்னிலையில் ஆஜரானதுடன், பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலர், நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் சார்பில் அதிகாரிகள் சிலர் ஆஜராகினர்.
இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ருவன் ஹரிஸ்சந்ரவும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சார்பில் சட்டத்தரணி கயனி உள்ளிட்ட குழுவினரும் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகலும் இவ்வாறு ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, சமயல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பிலான அனர்த்தங்கள் தொடர்பில் பார்க்கும் போது இலங்கையில் அது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனங்கள் தமது பொறுப்பை சரியாக செய்ததாக தெரிவியவில்லை எனவும் அதனால் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் முறைப்பாட்டாளர்களின் பிரதிநிதிகள் ஆணைக் குழுவில் கோரினர்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாமல் இருக்கும் வண்ணமாக, அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குமாறும் அவர்கள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் கோரினர்.
ஏனைய சந்தை பொருட்களைப் போன்று எரிவாயு சிலிண்டர்களிலும் உற்பத்தி திகதி, உள்ளடக்கம் தொடர்பில் விடயங்களை குறிப்பிட வேண்டும் என பரிந்துரைகளை வழங்குமாறும் அத்துடன் முறைப்பாட்டுக்கு அமைய லிட்ரோ கேஸ் நிறுவனத்தையும் பிரதிவாதியாக பெயரிடுமாறும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான ஊடகவியலாளர்களால் விடயங்கள் முன் வைக்கப்பட்டன.
இதனையடுத்து பிரதிவாதிகள், சமயல் எரிவாயு விவகாரத்தில் தமது பொறுப்புக்கள், தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக் குழுவின் அதிகாரிகள் முன்னிலையில் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு விபரித்தனர்.
சமயல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பிலான அனர்த்தம், முதன் முதலில் தங்களுக்கு எப்போது பதிவானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.
பொது மக்கள் முறைப்பாடளிக்க முன்னர், கடந்த ஏப்ரல் மாதமே சமயல் எரிவாயுவில் கலவையில் மாற்றங்கள் உள்ளதை கண்டறிந்ததாக அதற்கு பதிலளித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். இலங்கையில் 80 இற்கு 20 என இருந்த ப்ரோப்பேன், பியூட்டேன் கலவை 50 - 50 என இருப்பது அப்போது கண்டறியப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இந் நிலையில் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என ஆணைக் குழு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளை வினவிய நிலையில், அவ்வாறு சமயல் எரிவாயுவின் கலவையில் ஏற்படுத்தப்பட்டிருந்த மாற்றத்தை மையப்படுத்தி மாளிகாகந்த மற்றும் நுகேகொடை நீதிமன்றங்களில் லிட்ரோ, லாப் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், அதனைவிட அது தொடர்பில் விஷேட வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டதாக அவர்கள் கூறினர்.
இது தொடர்பில் மிக விரிவாக மனித உரிமைகள் ஆணைக் குழு விசாரணைகளை நடாத்தியதுடன் பல சந்தர்ப்பங்களில் அதற்கான உரிய பதிலகளை முன் வைக்க, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளாலும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளாலும் முடியாமல் போனது.
இந் நிலையிலேயே, தற்போது சந்தைக்கு விநியோகிக்கும் சமயல் எரிவாயு சிலிண்டர்களை அதன் நிற முத்திரைகளை மையப்படுத்தி கண்டறிய முடியும் எனவும், தற்போது லாப் மற்றும் லிட்ரோ ஆகிய சமயல் எரிவாயு சிலிண்டர்கள் சிவப்பு நிற முத்திரை ( சீல்) இடப்பட்ட சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதாகவும் அவற்றை பயன்படுத்தும் போது அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிது எனவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கூறினர்.
எவ்வாறாயினும் ஏற்கனவே சந்தையில் உள்ள, நீலம், மஞ்சல், பச்சை நிற முத்திரைகளைக் கொண்ட சமயல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவித்து அவற்றை மீளப் பெறுமாறு குறித்த நிறுவனங்களுக்கு கடந்த 4,6 ஆம் திகதிகளில் கடிதங்கள் அனுப்பியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் ஆணைக் குழுவுக்கு தெரிவித்தனர்.
அதன்படி அவ்வாறான சிவப்பு தவிர்த்த வர்ண முத்திரைகளைக் கொண்ட கேஸ் சிலிண்டர்களை விற்பனைச் செய்ய முடியாது எனவும், அவையே சிக்கலுக்கு உரிய கேஸ் சிலிண்டர்கள் என அவதானிக்கப்பட்டுள்ளதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகளும், முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான ஊடகவியலாளர்களும், தற்போதும் வீடுகளில் பயன்பாட்டில் உள்ள சமயல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் எடுக்க முடியுமான நடவடிக்கை என்ன என வினவினர்.
அதற்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை. எனினும் எரிவாயு கசிவு உள்ளிட்டவை தொடர்பில் பதிவாகும் போது அது தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டு நிலைமை அவதானிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.
நிற அல்லது வர்ண முத்திரைகள் தொடர்பிலான முறைமை தொடர்பில் பொது மக்கள் முறையாக தெளிவுபடுத்தப்படாத நிலையில், உடனடியாக அனர்த்தத்தை ஏற்படுத்தும், அனர்த்தத்தை குறைக்கும் சமயல் எரிவாயுவை வர்ண முத்திரைகளைக் கொண்டு எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாரு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்தது.
அத்துடன் சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கும் முறைமை ஒன்றினை முன் வைக்கவும் பிரதிவாதிகளுக்கு ஆணைக் குழு அறிவுறுத்தியது.
இந் நிலையில் மனித உரிமைகள் ஆணைக் குழு முன் வைக்கும் பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு வாரத்துக்குள் ஆணைக் குழுவை அறிக்கையிடுமாறு ஆணைக் குழு பிரதிவாதிகளுக்கு அறிவித்தது.
எவ்வாறயினும் இந்த விசாரணைகலின் போது, இலங்கையில் சமயல் எரிவாயு தொடர்பில் உரிய தரக் கட்டுப்பாடொன்று இல்லை என்பது பிரதிவாதிகளான நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலர், நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் ஆஜரான அதிகாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM