( எம்.எப்.எம்.பஸீர்)

நபர் ஒருவருக்கு கை விலங்கிட்டு, அவரின் காரிலேயே அவரைக் கடத்தி அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், 30 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. 

வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை | Virakesari.lk

பம்பலபிட்டி - லோரன்ஸ் வீதியில் உள்ள  வாகன தரிப்பிடத்தில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும் 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொழும்பு - திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, தனது காரை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளார். 

இதன்போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் முகக் கவசம் அணிந்து வந்துள்ள இருவர், தாம் பொலிஸார் எனக் கூறி, குறித்த நபரின் கைகளுக்கு விலங்கிட்டு, அவரது காரின் பின் ஆசனத்திலே அவரை அமர்த்தி கடத்தியுள்ளனர்.

 சிறிது தூரம் சென்றதும், அந் நபர் அணிந்திருந்த இரு மோதிரங்கள் மற்றும் கை  ஆபணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளதுடன், அவரது மனைவியையும் குறித்த இடத்துக்கு அழைக்குமாறு அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, அந்த நபர் அழைப்பை எடுத்து தமிழ் மொழியில் தனக்கு நேர்ந்துள்ள விடயத்தை மனைவிக்கு கூறியுள்ளதுடன், திருமண மண்டபத்திலிருந்து வெளியே வர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

 இந் நிலையில், கடத்தப்பட்ட நபரை, கொள்ளையர்கள் தனியார் வங்கியொன்றின் தானியக்க பணப் பறிமாற்று இயந்திரம் அருகே அழைத்து சென்று 30 ஆயிரம் ரூபா பணத்தையும் அதிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளனர்.

 பின்னர், கடத்தப்பட்ட நபரையும் அழைத்துக்கொண்டு காரில் அவர்கள்,  திருமண வைபவம் இடம்பெற்ற இடத்தை நோக்கி வந்துள்ள நிலையில்,  அப்பகுதியில் இரு பொலிஸார் நின்றிருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து காரை இடையிலேயே நிறுத்தி விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 எவ்வாறாயினும் வாகன தரிப்பு இடத்தில் கைவிடப்பட்டிருந்த, கொள்ளையர்கள் வந்ததாக கருதப்படும் மோட்டர் சைக்கிளை மீட்டுள்ள பொலிஸார், அதன்  இலக்கத்தை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது அந்த மோட்டார் சைக்கிள் கம்பஹா - கிரிந்திவல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இந் நிலையில் மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.